
பேரணிக்கு முன் என்னைக் கைது செய்வதற்கு முயற்சி; உதய கம்மன்பில தெரிவிப்பு
நவம்பர் 21ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியின் “நுகேகொட பேரணி”க்கு முன்னர், தன்னை சிறையில் அடைக்க அரசாங்கம் சதி செய்து வருவதாக பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில கூறியுள்ளார். தன்னை கைது செய்வதற்கான முயற்சிகள் மீண்டும் முன்னெடுக்கப்படுவதாகவும், ஆனால் எதற்கும் முகம்கொடுக்க தான் தயாராகவே இருக்கின்றேன் என்றும் பிவித்துற ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்ட அரச சார்பற்ற செயற்பாட்டாளர் ஒருவர் ஊடாக எனக்கு எதிரான முறைப்பாடொன்றை பதிவு செய்வதற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு பணிப்பாளரின் நியமனத்திற்கு எதிராக என்னால் வெளியிடப்பட்ட கருத்து தண்டனைக்குரிய குற்றமாகும் என்று கூறியுள்ளனர். அரச சார்பற்ற அமைப்பின் சார்பாக அவர் அங்கு சென்றிருந்தாலும் அவரிடம் அதற்கான பதிவுகள் இருக்கவில்லை. நாங்கள் சாட்சிகளுடனேயே அந்த நியமனம் தொடர்பில் கூறியிருந்தோம்.
நாங்கள் சுட்டிக்காட்டிய தவறுகளை திருத்திக்கொள்ளாது, ஊழல் மோசடிகளை சுட்டிக்காட்டியவர்களையே பிடிக்கும் செயற்பாடே நடக்கின்றது. என்னை கைது செய்யும் முயற்சிகள் இதற்கு முன்னரும் நடந்தது. 7 தடவைகள் முயற்சிகள் நடந்தும் அது நடக்கவில்லை. தெற்கில் உள்ள அமைச்சர் ஒருவருக்கு என்னை சிறையில் போடாது தூக்கம் வாராதாம். இதனால் அவர்களின் எண்ணங்களுக்காக அரச செலவில் சிறிதுகாலத்திற்கு சென்று வரவும் எதிர்பார்க்கின்றேன் என்றார்.

