
பேரணியில் பங்கேற்காவிடின் சஜித் தரப்புக்கே நஷ்டம் ஏற்படும்
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடை நகரில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பேரணியில் ஐக்கிய மக்கள் சக்தி கலந்தகொள்ளாவிட்டால் அரசியலில் அவர்களுக்கே நஷ்டம் ஏற்படும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்ற புதன்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போது, நுகொடவில் நடத்தப்படவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கலந்துகொள்ளாது என்று தெரிவிக்கப்படுவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அந்தக் கட்சியின் பேச்சாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமானவே இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீனி கீழே கொட்டும் போது எறும்புகளை அதனை தேடி தானாக வரும். அதேபோன்றுதான் எதிர்க்கட்சிகள் செய்யும் வேலைத்திட்டத்தில் சகல எதிர்க்கட்சிகளும் மாபெரும் மக்கள் குரலுடன் இணைய வேண்டும். அத்துடன் பிரதான எதிர்க்கட்சியாக கருதுவதற்கு பாராளுமன்றத்தில் உள்ள ஆசனங்களின் எண்ணிக்கையை போன்று அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் போது அந்தக் கட்சி வழங்கும் பங்களிப்பும் பிரதானமானதாக இருக்கும். எவ்வாறாயினும் ஐக்கிய மக்கள் சக்தியினர் மாபெரும் மக்கள் பேரணிக்கு வருவது வராமல் இருப்பது அந்தக் கட்சியின் தீர்மானமே. எனினும் அந்தக் கட்சி வராவிட்டால் அரசியலில் அவர்களுக்கே நஷ்டமாக அமையும். இதனால் அவர்கள் இந்த மேடைக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியலை நான் ஆழமாக அறிந்தவன் அல்ல. எனினும் தலைவர் தனியாக தீர்மானம் எடுப்பவராக இருக்க முடியாது. கூட்டாகவே தீர்மானங்கள் எடுக்கப்படும். இதனால் அவர்களுக்கு இந்த பேரணியில் வருவதால் அரசியலில் ஏதேனும் பின்னடைவு ஏற்படும் என்று நினைப்பார்களாக இருந்தால் அது அவர்களின் எண்ணமாக இருக்கும். ஆனால் அவர்கள் ஏதேனும் வழியில் அதில் இணையலாம் என்றார்.

