போதைப் பொருள் ஒழிப்புக்கு புலிகளின் சட்டத்தை நீங்களும் பின்பற்றுங்கள்

போதைப் பொருள் ஒழிப்புக்கு புலிகளின் சட்டத்தை நீங்களும் பின்பற்றுங்கள்

விடுதலைப் புலிகளின் நிர்வாக கட்டமைப்பில் இருக்கின்ற போது வடக்கு, கிழக்கில் போதைப் பொருள் பாவனை என்பது ஒரு சதவீதமேனும் இருக்கவில்லை. சிறந்த நிர்வாக கட்டமைப்புடன் வடக்கு, கிழக்கில் வாழுகின்ற ஒவ்வொருவரும் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட்டனர். அதுபோன்ற சரியான சட்டதிட்டங்களை விதித்து இந்த நாட்டில் போதைப் பொருள் பாவனையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்படட குற்றங்களை ஒழிப்பதற்கான ஒரு தேசிய வேலைத்திட்டம் மற்றும் சட்டரீதியான கட்டமைப்பை வலுப்படுத்துதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது கோடீஸ்வரன் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் போதைப் பொருள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் தவிர்க்கப்பட வேண்டியதாக இருக்கின்றது. இந்த நாட்டின் எதிர்க்கால சந்ததியினரை மட்டுமன்றி நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கின்ற செயற்பாடாகவே இது பார்க்கப்படுகின்றது. இந்த அரசாங்கம் போதைப் பொருள் ஒழிப்பு விடயத்திலும், குற்றச் செயல்களை தடுப்பதிலும் தங்களது செயற்பாடுகளை முன்னோக்கி நகர்த்துவது பாராட்டக்கூடிய விடயமே.

நாட்டில் பல துப்பாக்கி சூடுகள், கொலைகள் என்பன நடந்துகொண்டே இருக்கின்றன. இதனை நாடு என்ற ரீதியில் ஒன்றிணைந்து குற்றச் செயல்களை மற்றும் போதைப் பொருள் கடத்தல்களை முன்னெடுப்பவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். கடுமையான தண்டனைகளை வழங்கியும். கடுமையான சட்டத்திட்டங்களை விதித்தும் போதைப் பொருள் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கும், அதனுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கும் தகுந்த தண்டனையை வழங்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இந்த அரசாங்கத்திற்கு உள்ளது. அதற்கான முழுமையான ஒத்துழைப்புகளை நாங்கள் வழங்குவோம்.

குறிப்பாக 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு, கிழக்கு விடுதலைப் புலிகளின் நிர்வாக கட்டமைப்பில் இருக்கின்ற போது அங்கே போதைப் பொருள் பாவனை என்பது ஒரு சதவீதமேனும் இருக்கவில்லை. சிறந்த நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்தி வடக்கு, கிழக்கில் வாழுகின்ற ஒவ்வொருவரும் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட்டனர். அங்கே ஒரு காலத்திலும் போதைப் பொருளை பாவிக்கவில்லை. அவ்வாறான சரியான சட்டதிட்டங்களை போட்டு இந்த நாட்டில் போதைப் பொருள் பாவனையை நிறுத்த வேண்டிய கடமைப் பொறுப்பு உள்ளது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )