
அந்த நாமல் இந்த நாமலா!; அல்லது வேறு நாமலா
‘ நாமல் சேர், மகே சேர் ராஜபக்ச ‘ என்று பெகோ சமனின் தொலைபேசியில் உள்ளது. அந்த நாமல் இந்த நாமலா அல்லது வேறு நாமலா என்பது எமக்கு தெரியாது.ஆனால் விரைவில் உண்மை வெளிவரும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்படட குற்றங்களை ஒழிப்பதற்கான ஒரு தேசிய வேலைத்திட்டம் மற்றும் சட்டரீதியான கட்டமைப்பை வலுப்படுத்துதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
போதைப்பொருள் உற்பத்தி மாவட்டமாக அம்பாந்தோட்டையை எதிர்தரப்பினர் மாற்றியமைத்துள்ளார்கள். போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கைகளை இடைநிறுத்தப் போவதில்லை. இலகுப்படுத்தப்போவதுமில்லை.
ஐ.ஆர்.சி. ஆவணப்படுத்தலில் 1305/ 2015 கீழ் ‘பி’ தரத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிக்காகவே எதிர்க்கட்சியினர் இன்று முன்னிலையாகுகிறார்கள்.ஐக்கிய மக்கள் சக்தியின் 35 பிரதேச சபைத் தலைவர்கள் உள்ளனர். கொலை செய்யப்பட்டவரை தவிர்த்து மிகுதி 34 பேருக்கு எவ்வித அச்சுறுத்தலும்,பாதிப்பும் ஏற்படவில்லை.
மாகந்துரே மதூஸ் வெளிப்படுத்திய உண்மைகள் அவருடன் புதைக்கப்பட்டன. மைத்திரி,ரணில், சஜித் ஆகியோர் அன்று அரசியல் குற்றவாளிகளை பாதுகாத்தார்கள். அதேபோல் கோத்தபாய மற்றும் ரணில் – ராஜபக்சக்கள் குற்றவாளிகளை பாதுகாத்தார்கள்.
நாமல் ராஜபக்சவின் சகாவான தங்காலை பிரதேச சபைத் தலைவர் வெளிநாட்டவர் ஒருவரை கொலை செய்தார். நாட்டுக்கு சுற்றுலா வந்த பெண் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சிக்கையில் அதை அந்த பெண்ணின் கணவர் தடுத்துள்ளார்.அதனால் அந்த வெளிநாட்டவர் கொலை செய்யப்பட்டார். சம்பத் மனம்பேரி, பெகோ சமன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள்.
பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு எந்த நாட்டில் வழங்கப்படுகிறது? ‘ நாமல் சேர், மகே சேர் ராஜபக்ச’ என்று . பெகோ சமனின் தொலைபேசியில் உள்ளது. அந்த நாமல் இந்த நாமலா அல்லது பிறிதொரு நாமலா, என்பது எமக்கு தெரியாது. .ஆனால் உண்மைகள் விரைவில் வெளிவரும்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா போதைப்பொருளுடன் அகப்பட்ட போது அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஹெலிகொப்டரில் நீர்கொழும்புக்கு வந்து நிமல் லான்சாவை கட்டி அணைத்து பாதுகாத்தார். ஆனால் போதைப்பொருள் வர்த்தகத்தை நாங்கள் முடிவுக்கு கொண்டு வருவோம்.அதில் எந்த மாற்றமும் கிடையாதுஎன்றார்.

