
பளையில் 900 ஏக்கர் காணியை சட்டவிரோதமாக வழங்க முயற்சி; தடுத்து நிறுத்திய கஜேந்திரகுமார்
பளையிலுள்ள காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான சுமார் 900 ஏக்கர் காணிகளை ஜனதா மக்கள் பெருந்தோட்ட சபை என்ற அமைப்புக்கு சட்டவிரோதமான முறையில் தென்பகுதி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நிலையில் இக்காணியை அவர்களுக்கு சட்டபூர்வமாக்குவதற்கு அரசு மேற்கொண்ட முயற்சியை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தடுத்து நிறுத்தினார்.
பளை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற நிலையிலே இக்காணி வழங்கப்பட்ட விதம் சட்டவிரோதமானது என்பதை அம் பலப்படுத்திய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அம்முயற்சியை தடுத்து நிறுத்தினார்.
தனியார் காணிகளில் இருந்து படையினர் வெளியேற வேண்டுமென மக்கள் 16 வருடங்களாக கோரிவருகின்ற நிலையில் பளைப்பகுதியில் படையினர் வசமுள்ள இரண்டு தனியார் காணிகளை குறிப்பிட்டு அக்காணிகளது உரிமையாளர்கள் மட்டுமே தமது காணிகளை விடுவிக்க கோரியுள்ளார்கள் என்றும் ஆகவே அக்காணிகளை விடுவிக்க வேண்டுமா என ஒருங்கிணைப்புக் குழுவிடம் அரச தரப்பு எம்.பி. யான இளங்குமரன் கேட்டார்
இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி,பளையிலுள்ள தனியார் காணிகள் விபரம் பிரதேச செயலகத்திடம் உள்ளது. அந்த விபரங்களை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு ஊடக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்குச் சமர்ப்பித்து அவை அனைத்திலிருந்தும் இராணுவம் வெளியேற வேண்டுமென்ற தீர்மானம் மேற்கொள்ளப்படல் வேண்டுமென வலியுறுத்தினார்.
இக்கருத்தை பிரதேசசபை தவிசாளர் சுரேனும் சிறீதரன் எம்.பி.யின் பிரதிநிதியும் ஆமோதித்ததுடன் சபையும் ஆமோதித்தது.இதனையடுத்து இவ்விடயம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

