தெற்கு கடலில் 51 பொதிகளில் மிதந்த 840 கிலோ போதைப் பொருட்கள் மீட்பு !

தெற்கு கடலில் 51 பொதிகளில் மிதந்த 840 கிலோ போதைப் பொருட்கள் மீட்பு !

670 கிலோ ஐஸ்,156 கிலோ ஹெரோயின், 12 கிலோ ஹஷீஸ் இருந்தன; 5 பேர் கைது

இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் மிதந்துகொண்டிருந்த 51 பொதிகளில் இருந்து 670 கிலோ ஐஸ் மற்றும் 156 கிலோ ஹெரோயின் அடங்கலாக 840 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த போதைப் பொருள் பொதிகள் தொடர்பில் ஐந்து பேர் விசேட அதிரடிப்படையினரால் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்னர் மூன்று படகுகளில் நாட்டுக்குள் போதைப் பொருட்களை கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பில் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய பொலிஸ்மா அதிபரின் கண்காணிப்பில் வடக்கு முதல் தெற்கு வரையில் கடல் பகுதியில் கடந்த வாரங்களாக கடற்படையினரின் உதவியுடன் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

பாதுகாப்பு தரப்பினரின் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் தகவல் அறிந்த போதைப் பொருள் கடத்தல்காரர்களால் குறித்த படகுகளின் இருப்பிடத்தை கடற்படையினர் கண்டுபிடிக்க முடியாதவாறு அந்தப் படகுகளில் இருந்த வீஎம்எஸ் கருவிகள் செயற்பாட்டில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இவ்வாறான நிலைமையில் போதைப் பொருட்கள் அடங்குவதாக சந்தேகிக்கப்பட்ட 51 பொதிகள் தெற்கு கடல் பகுதியில் மிதந்துக்கொண்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நண்பகல் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பொதிகள் அன்றைய தினம் இரவு கடற்படையினரால் தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அவ்வேளையில் அந்த இடத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர மற்றும் கடற்படை தளபதி அத்மிரால் காஞ்சன பாணகொட ஆகியோரும் சென்று பொதிகளை பார்வையிட்டனர்.

இதனை தொடர்ந்து அந்த பொதிகளில் உள்ள போதைப் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்திய போது அதில் 840 கிலோவுக்கு அதிக நிறையுடைய ஐஸ், ஹெரோயின், ஹெஸ் ஆகிய போதைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்படி 670 கிலோ ஐஸ் போதைப் பொருளும், 12 கிலோ ஹஷீஸ் போதைப்பொருளும் மற்றும் 156 கிலோ ஹெரோயின் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போதைப் பொருட்கள் ‘உணாகூருவே சாந்த’ என்ற போதைப் பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமானவையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் தென்பகுதியில் ஐந்து பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போதைப் பொருளை கொண்டு வருவதற்காக பயன்படுத்தியதாக சந்தேகிக்கும் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )