நான் இறக்கவில்லை உயிருடன் இருக்கிறேன்; வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு
நான் இறக்கவில்லை. உயிருடனேயே இருக்கின்றேன். நான் இறந்துவிட்டேன் என்று வெளியான செய்தியை நகைச்சுவையாகவே நான் பார்த்தேன் என்று முன்னாள் அமைச்சரும் ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தள்ளார்.
வாசுதேவ நாணயக்கார காலமாகியுள்ளதாக போலி செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் நேற்று செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் தெரிவிக்கையில்,
இறந்துவிட்டேன் என்று பல்வேறு செய்திகள் வெளியாகியிருந்தன. பல்வேறு தொலைபேசி அழைப்புகள் மூலம் எனக்கும் இவ்வாறு கூறப்பட்டது. எனது பிறந்த வருடத்தையும் இந்த வருடத்தையும் இணைத்தே இவ்வாறு செய்திகளை வெளியிட்டிருந்தனர். இந்த செய்திகளை பார்த்து நான் சிரித்தேன்.
இது தொடர்பில் தேடி பார்த்த போது ஜே.வி.பி அல்லது தேசிய மக்கள் சக்தி மீது பொறாமையடையும் நபரொருவரால் இந்த செய்தி போடப்பட்டதாக அறிகின்றேன். தேசிய மக்கள் சக்தி என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படியென்றால் அது தேசிய மக்கள் சக்திக்கு எதிரானவராகவே இருக்க வேண்டும். இது தொடர்பில் நான் கோபப்படவில்லை.
இதேவேளை எனக்கு அரசியலில் தேர்தலில் போட்டியிட முடியாவிட்டாலும் இடதுசாரி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

