
வீரவன்ச விரைவில் கைதாகும் சாத்தியம்!; வாக்குமூலத்தில் அவர் கூறியதென்ன
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச ஒக்டோபர் 2 ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்த கருத்துகளை உறுதிப்படுத்த எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கவில்லை என்று பொலிஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
செப்டெம்பர் 22ஆம் திகதி தங்காலையில் போதைப்பொருள் பறிமுதல் சம்பவம் தொடர்பாக பெலியத்த சனா என்ற சந்தேக நபருடன் தொடர்புடையதாக விமல் வீரவன்ச கூறிய கருத்துகள் தொடர்பில், வாக்குமூலம் அளிக்க தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தில், வியாழக்கிழமை விமல் வீரவன்ச முன்னிலையானார்.
எனினும், தமது வாக்குமூலத்தில், வீரசிங்க சனத் (பெலியத்த சனா/புவக்தண்டாவே சனா) என்பவரை ஜேவிபியின் தீவிர உறுப்பினராக ஒருபோதும் சந்தித்ததில்லை அல்லது அடையாளம் காணவில்லை என்று வீரவன்ச கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரச அனுசரணையுடன் போதைப்பொருள் கொண்டு வரப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற தமது கூற்று நாட்டின் ஒட்டுமொத்த நிலைமை குறித்த பொதுவான கருத்து என்றும், இந்த குறிப்பிட்ட சம்பவத்தை நோக்கியது அல்ல என்றும் விமல் வீரவன்ச விளக்கியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபரை போதைப்பொருள் கொண்டு சென்ற படகின் உரிமையாளருடன் தொடர்புபடுத்தும் வகையில் தாம் கூறிய கருத்துக்கள் அப்போது கிடைத்த ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் அமைந்தவை என்றும் வீரவன்ச, பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் ஜனாதிபதி சந்தேக நபரின் வீட்டிற்குச் சென்றார் அல்லது உணவருந்தினார் என்ற குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், ஜனாதிபதி அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் மட்டுமே உணவருந்தியதாக கூறினார். பெலியத்த சனா என்ற சந்தேக நபரைக் கைது செய்வதில் ஏற்பட்ட தாமதம் அரசின் செல்வாக்கு அல்லது அனுசரணை காரணமாக இருக்கலாம் என்று தான் நம்புவதாகவும் வீரவன்ச குறிப்பிட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, அக்டோபர் 2 ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் தெரிவித்த கருத்துகளை நிரூபிக்கும் எந்த ஆதாரத்தையும் விமல் வீரவன்ச. வழங்கத் தவறிவிட்டதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில், நடந்து வரும் விசாரணையின் போது கண்டறியப்பட்ட தவறான தகவல்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்