
விளையாட்டில் வெற்றி: மாணவியை ஒதுக்கிய சக மாணவிகள் – யாழில் மனமுடைந்து 2 வது மாடியில் இருந்து குதித்த மாணவி
யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியில், விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பெற்ற காரணத்தால் சக மாணவிகளால் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் 14 வயது மாணவி ஒருவர், விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்ததில் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவைச் சேர்ந்த குறித்த மாணவி, கடந்த ஒரு வருடமாக உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவிகள் விடுதியில் தங்கி நின்று கல்வி கற்று வந்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி ஒன்றில் அவர் முதலிடம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, அவரது வகுப்பு மாணவிகள் சிலர் அவரிடமிருந்து தங்களைப் பிரித்து விலகி இருந்ததாகவும், ஒதுக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி, தான் தங்கியிருந்த விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் மாணவியின் காலில் படுகாயம் ஏற்பட்டதையடுத்து, அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணையில் வாக்குமூலம் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது, குறித்த மாணவி தனது வாக்குமூலத்தில், சக மாணவிகள் ஒதுக்கியதாலேயே மனமுடைந்து இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
சிகிச்சை பெற்றுவரும் மாணவியிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்வதோடு, இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.