
நிலைமாறுகால நீதி சம்பந்தமாக செயல்படுவதாக இருந்தால் குற்றம் செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துங்கள்
நிலைமாறுகால நீதி சம்பந்தமாக செயல்படுவதாக இருந்தால் நீதி என்பது அத்தியாவசியம். குற்றம் செய்தவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்துவது என்பது அத்தியாவசியம். அந்த அம்சம் இல்லாமல் இலங்கையில் நிலைமாறு கால நீதி சாத்தியம் இல்லை என்பதை சர்வதேச பிரதிநிதிகள் தம்மிடம் கூறியிருந்தார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் செம்மணியில் மேற்கொண்டு வரும் சுழற்சி முறையான உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இந்த போராட்டம் விசேடமான ஒரு தன்மையை கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசேட குழு அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் அதற்கு ஏற்ப இந்த போராட்டங்களை பாதிக்கப்பட்ட மக்கள் முன்னெடுத்துள்ளனர்.
பதினாறு வருடம் போர் முடிவடைந்து சர்வதேச மட்டத்தில் இருந்து இலங்கை அரசாங்கத்திற்கு வரக்கூடிய அழுத்தம் காரணமாக காணாமல் ஆக்கப்பட்டோருடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தாங்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தை உருவாக்கி அதனை கையாள்வோம் என்று மாறி மாறி வந்த அரசாங்கங்கள் கொள்கையளவில் இணங்கினாலும் இவர்களுடைய செயற்பாடுகள் அனைத்தும் உண்மையை கண்டறிந்து செயல்படுவதாக இல்லை.
மாறாக சர்வதேச மட்டத்திற்கு ஒரு புறம் தாங்கள் இந்த விடயங்களை கையாள்வதாக காட்டும் வகையிலே நடந்து கொள்வதுடன், பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு நஷ்ட ஈட்டை பெற்று இந்த விவகாரங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அழுத்தம் கொடுக்கின்ற செயற்பாடுகளாக மட்டும் தான் இருக்கிறது.
இந்த முறை அரசாங்க தரப்பும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற பிரதிநிதிகள் சென்ற போது ஐநா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தினுடைய பிரதிநிதிகளை சந்திக்க கூடியதாக இருந்தது. அதிலே ஆசிய பசுபிக் கண்டத்தின் பொறுப்பாளர் ரோரி முன்கோவனும் அவரது தலைமையில் இலங்கைக்கு பொறுப்பான அதிகாரிகளும் ஒஸ்லாப் என்ற கட்டமைப்பின் இரண்டு அதிகாரிகளும் இந்த பாராளுமன்ற கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்களை சந்தித்தார்கள்.
அந்த இடத்தில் நிலைமாறுகால நீதி சம்பந்தமாக செயல்படுவதாக இருந்தால் நீதி என்பது அத்தியாவசியம். குற்றம் செய்தவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்துவது என்பது அத்தியாவசியம். அந்த அம்சம் இல்லாமல் நிலைமாறு கால நீதி சாத்தியம் இல்லை என்பதை ஆணித்தரமாக கூறியிருந்தார்கள்.
நீதி என்ற விடயத்தை கைவிட்டு நல்லிணக்கம் என்ற பெயரில் உண்மை கண்டறிதல் என்ற போர்வையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கொடுக்கிறோம் என்ற பெயரில் குழுக்களை உருவாக்கி நீதியை கைவிட்டு நஷ்ட ஈடுகளை கொடுத்து சமாளிக்கின்ற வேலையை மட்டும் தான் செய்கிறார்கள்.
ஆகவே எங்களுடைய பாதிக்கப்பட்ட மக்கள், அரசாங்கம் அவ்வகையான தவறான போலியான நிகழ்ச்சி நிரலை சர்வதேச மட்டத்திற்கு காட்டுகின்ற பொழுது இந்த போராட்டங்களை அந்த நேரத்தில் நடத்தி தற்போதைய அரசாங்கமும், தங்களை இதற்கு முதல் இருந்த அரசாங்கங்களை போல தொடர்ந்து ஏமாற்றுகின்றது என்ற செய்தியை வெளிக்காட்டுவதுடன் தங்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு தங்களுடைய பிள்ளைகள், உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்
தொடர்பாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகள் சர்வதேச விசாரணை ஊடாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதை வெளிப்படுத்துவது அத்தியாவசியம்.அந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்களின் முயற்சிகளுக்கு எமது ஒரு ஆதரவை வழங்கும் வகையில் போராட்டத்தில் பங்கேற்றோம் – என்றார்.