
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம்; எம்மவரை ஏமாற்றும் ஐ.நா.ஆணைக்குழு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் நடைபெறும் நேரத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் அமர்வுகள் போராடுகின்ற தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய வகையில் அமையவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் செம்மணியில் மேற்கொண்டு வரும் சுழற்சி முறையான உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சிவஞானம் சிறீதரன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஜெனிவாவில் நடைபெறுகின்ற மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் கண்ணுக்கு முன்னால் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள், குடும்பத்தினரை கையளிக்கப்பட்டவர்களின் விவரங்கள் அடங்கிய அடையாளத்தை வெளிப்படுத்துகின்ற பெறுமதியான போராட்டத்தை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்டுள்ளனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் நடைபெறும் நேரத்தில் ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் அமர்வுகள் போராடுகின்ற தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய வகையில் அமையவில்லை. ஆனால் இந்த விடயத்தில் கனதியான நம்பிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் எடுக்க வேண்டும். இலங்கையை ரோம் சட்டத்திற்குள் உள்வாங்க வேண்டும். அதற்கான அழுத்தத்தை சர்வதேச நாடுகள் பிரயோகிக்க வேண்டும்.
ரோம் சட்டத்தில் உள்வாங்கப்படும்போதுதான் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. அதற்காக நாங்கள் செயல்படுகிறோம். மக்களின் பாதிப்பு எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் போராட்டத்திற்கான ஆதரவை வழங்கும் வகையில் இணைந்திருக்கிறோம் – என்றார்.