மன்னாரில் மக்களுக்கு எதிராக நடந்த பொலிஸாரின் வன்முறை அரச பயங்கரவாதமே; அரசின் உண்மை முகம் தெரிகிறது 

மன்னாரில் மக்களுக்கு எதிராக நடந்த பொலிஸாரின் வன்முறை அரச பயங்கரவாதமே; அரசின் உண்மை முகம் தெரிகிறது 

மன்னாரில் தற்போது முன்னெடுக்கப்படும் காற்றாலை மற்றும் கனியமணல் அகழ்வுத் திட்ட நடவடிக்கைகள் மன்னார்த் தீவையே அழிக்கின்ற ஆபத்துக்கள் காணப்படுவதால் அந்த மக்கள் தங்கள் இருப்பை, மண்ணைப் பாதுகாப்பதற்காக அகிம்சை வழியில், ஜனநாயக வழியில் போராடி வரும் மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் சனிக்கிழமை இரவு பொலிஸாரைப் பயன்படுத்திப் பாரதூரமான வன்முறையில் ஈடுபட்டுள்ளது. இதனை நாங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தேசியமக்கள் சக்தி அரசாங்கம் தன்னுடைய உண்மையான முகத்தைத் தற்போது தான் காட்ட ஆரம்பித்துள்ளது. இது முற்றுமுழுதாக அரச பயங்கரவாதச் செயற்பாடு எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையாகச் சாடியுள்ளார்.

யாழ் கொக்குவிலிலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் விரும்பாத அபிவிருத்தி எக் காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாது, எக் காலத்திலும் நின்றுபிடிக்கப் போவதில்லை. இது முன்னரிருந்த அரசாங்கங்கள் ஊழல் செயற்பாடுகளுடன் முன்னெடுத்த வேலைத் திட்டங்களை எதிர்த்த போது தேசிய மக்கள் சக்தியினரால் சொல்லப்பட்ட கருத்துக்கள். எனினும், மன்னாரில் காற்றாலைத் திட்டத்தின் ஊடாகக் கோடிக் கணக்கான பணம் வருமானமாக வருமெனக் கூறி அதனை அபிவிருத்தியெனக் காட்டி, அந்த மக்களின் நலன்களை முற்றிலும் புறந் தள்ளி, மக்களின் இருப்பையே அழிக்கும் வகையில் வேலைத் திட்டங்களைத் தொடர்வதற்கு முடிவெடுக்கப்பட்டு அந்த மக்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவது அரச பயங்கரவாதமேயன்றி வேறில்லை.

தற்போதைய அரசு தேர்தலுக்கு முன்னர் மக்களின் வாக்கைப் பெறுவதற்காக மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் வாக்குறுதிகளை வழங்கி விட்டுத் தற்போது அதற்கு முழுவதும் நேர்மாறாகச் செயற்பட்டு வருகின்றனர். மன்னாரில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் செயற்பாடுகள் ஊடாக இந்த விடயம் தெளிவாகப் புலப்படுகிறது.

நாம் மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுத் திட்டத்திற்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், மக்களுக்கும் எங்கள் பூரண ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குகின்றோம். மன்னார் தீவைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் எடுக்கவிருக்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் எங்கள் நிபந்தனையில்லாத ஆதரவை வழங்கத் தயாராகவிருக்கின்றோம். அரச பயங்கரவாதச் செயற்பாடுகளால் மன்னாரில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் நாங்கள் எங்கள் ஆறுதலையும், ஆதரவையும் வழங்கி நிற்கின்றோம்.

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அரச பயங்கரவாதச் செயற்பாடுகளை மன்னார் மாவட்ட ஆயர், கத்தோலிக்க திருச்சபை, சைவ, முஸ்லீம் மத குருமார்கள், தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து எதிர்க்க வேண்டும். அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களின் இருப்பை அழிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளைத் தமிழ்பேசும் மக்களாக நாமனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )