வட கிழக்கை இலக்கு வைத்து கொண்டு வரப்பட்ட போதைப் பொருள் இன்று தெற்கையும் சீரழிக்கிறது; பொதுஜன பெரமுனவும் இந்த அரசும் பதில் கூற வேண்டும்

வட கிழக்கை இலக்கு வைத்து கொண்டு வரப்பட்ட போதைப் பொருள் இன்று தெற்கையும் சீரழிக்கிறது; பொதுஜன பெரமுனவும் இந்த அரசும் பதில் கூற வேண்டும்

தங்காலை போன்ற இடங்களில் தங்களை மீறி எதுவும் நடக்காது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் அடிக்கடி பெருமிதத்துடன் கூறி வந்த நிலையில் தங்காலையில் பெருமளவு போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமை அவர்களுக்குத் தெரியாமலா நடந்தது? எனவே, இதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரும் பதில் கூற வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக இதற்கு அரசாங்கம் உரிய பதிலை வழங்க வேண்டும் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நேற்றுப் புதன்கிழமை (24.09.2025) மாலை யாழ்ப்பாணம் கொக்குவிலிலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சில தினங்களுக்கு முன்னர் தென்னிலங்கை தங்காலையில் 705 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது எங்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. இவ்வளவு பெருந் தொகையான போதைப் பொருட்கள் தென்னிலங்கையில் கண்டறியப்படுவது இதுவே முதல் தடவை. குறித்த போதைப் பொருட்கள் மிகவும் பெறுமதி வாய்ந்தது என்பதுடன் காரமானவை எனவும் தெரிய வருகிறது.

தமிழர்களின் அரசியல் கோட்பாடுகளை, அரசியல் இலட்சியத்தை, அரசியல் செயற்பாடுகளைச் சிதைப்பதற்காகத் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட போதைப் பொருள் பாவனை இன்று சிங்கள மக்கள் மத்தியிலும் ஆபத்தை ஏற்படுத்துகின்ற சூழலைத் தோற்றுவித்துள்ளது.

வட-கிழக்குப் பிரதேசங்கள் ஐஸ் போன்ற போதைப் பொருட்களாலும், மதுப் பழக்கத்தாலும் தற்போது முற்றுமுழுதாக மூழ்கிப் போயுள்ளது. முன்னைய அரசாங்கங்கள் மாத்திரமல்லாமல் தற்போதைய அரசாங்கமும் இதற்குத் திட்டமிட்டு அனுமதித்துள்ளது. தற்போது வடக்கு- கிழக்குத் தமிழர் தாயகத்தில் 01 இராணுவச் சிப்பாய்க்கு 10 பொதுமக்கள் என்ற விகிதத்தில் தமிழர் தாயகத்தை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளது. அதுவும் வன்னியில் 01 இராணுவச் சிப்பாய்க்கு 04 பொதுமக்கள் என்ற அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் அனுமதி, விருப்பத்தை மீறி வடக்கு- கிழக்கில் போதை வியாபாரம் நடக்க முடியாது.

தற்போதைய அரசாங்கம் இதற்கு முன்னரிருந்த அரசாங்கங்கள் போலல்லாமல் முற்றுமுழுதாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தது. எனினும், வடக்கு- கிழக்குத் தமிழர் தாயகத்தில் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த அனைத்து அரசாங்கங்களின் செயற்பாடுகளுடன் ஒத்துப் போகும் வகையில் தான் அமைந்துள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பிரதான அங்கம் வகிக்கும் ஜேவிபி கடந்த காலங்களில் தமிழ்மக்களுக்கு எதிராக முழு இனவாதத்துடன் செயற்பட்டதொரு கட்சி. எனவே அந்தக் கட்சியின் தலைமைத்துவமாகத் தற்போது செயற்படும் தேசியமக்கள் சக்தி அரசாங்கமும் தமிழ்மக்களுக்கு எதிராகச் செயற்படுவதில் ஆச்சரியமில்லை. நாங்கள் பெரிதாக எதிர்பார்ப்பதில் பயனில்லை.

ஆனால், தேசியமக்கள் அரசாங்கம் தென்னிலங்கை மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் எதனையும் செய்யாமல் அல்லது செய்ய முடியாமல் இருக்கிறார்கள் என்றால் இதுதொடர்பில் தென்னிலங்கை மக்கள் நன்கு கவனம் செலுத்த வேண்டும்.

தமிழ்மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்க்காமல், தீர்வைத் தராமல் தமிழ்மக்களை முடக்குவதற்கு மாறி மாறி வந்த ஒவ்வொரு அரசாங்கங்களும் செய்த மிகத் தவறான செயற்பாடுகள் தற்போதும் தொடர்கின்ற நிலையில் இவ்வாறான திட்டமிட்ட போதைப் பொருள் பாவனைச் செயற்பாடுகள் தமிழ்மக்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் காலப் போக்கில் தமிழர் தாயகத்தைத் தாண்டித் தென்னிலங்கையையும் பாதிக்கும் என்பதைத் தற்போதாவது சிங்கள மக்கள் உணரத் தொடங்க வேண்டும். இதனைத் தான் நாங்கள் நீண்டகாலமாகக் கூறி வருகின்றோம் எனவும் சுட்டிக்காட்டினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )