
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி செம்மணியில் 5 நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்
ஐக்கியநாடுகள் சபையின் 60 ஆவது கூட்டத் தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்குச் சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக நீதி வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி நாளை வியாழக்கிழமை (25) முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை யாழ் செம்மணிச் சந்திப் பகுதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாகவும், இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தமிழ்மக்களையும் அணிதிரண்டு வந்து ஆதரவு வழங்குமாறும் வடக்கு- கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் எமது உறவுகள் எங்கே? என்று கேட்டுத் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருந்த போது ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கை விஜயம் செய்து வடக்கு- கிழக்குத் தமிழர் பகுதிகளுக்கும் வருகை தந்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டார். அவர் எம் மக்களின் கண்ணீருக்குச் சரியான நிரந்தரத் தீர்வு தருவார் என்று நாங்கள் நம்பியிருந்தோம். எனினும், இம்முறை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரின் போது வெளிவந்த அறிக்கையில் தற்போதைய அரசுக்கு உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக ஒரு சந்தர்ப்பம் வழங்குவோம் என்ற அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் எந்தவொரு தீர்வும் கிடைக்கப் போவதில்லை.
தேசியமக்கள் சக்தி அரசாங்கத்தில் தற்போது அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தற்போது பதவி வகிக்கும் தமிழர்கள் தமிழினத்திற்கு நடந்தது இனப்படுகொலை என்பதைப் பாராளுமன்றத்தில் ஒருநாளாவது தெரிவித்து உரையாற்றியிருப்பார்களா? கேள்வி கேட்டிருப்பார்களா? இது இவ்வாறிருக்கப் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் எங்களைக் கிணற்றுத் தவளைகள் போன்று கத்திக் கொண்டிருப்பதாகக் கூறியிருக்கின்றார். முன்னைய அரசுகள் மனிதப் புதைகுழி அகழ்வுகளை இடையில் நிறுத்தியிருப்பதாகவும், தற்போதைய அரசு தொடர்ந்தும் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்து நீதியை வழங்குவதற்குத் தயாராகவிருப்பதாகவும் கூறியுள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழியில் யார் புதைக்கப்பட்டுள்ளனர்? என்பதைக் கண்டறிவதற்கான மரபணுப் பரிசோனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எதிர்வரும் நாட்களில் மழைகாலம் என்பதால் அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பகுதிகள் சிதைக்கப்படலாம். எனவே, அகழ்வு முன்னெடுக்கப்படும் பகுதிகளில் பாதுகாப்புக் கொட்டில்கள் அமைக்கப்பட வேண்டும். பாதுகாப்புக் கமராக்கள் பொருத்தப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மனிதப் புதைகுழி அகழ்வைக் கண்காணிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இம் மாதம்- 22 ஆம் திகதி முதல் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக ஒரு மாநாடு நடைபெற்று வருகிறது. அந்த மாநாட்டில் காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்காக ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும்.
எனவே, உலக நாடுகள் தங்கள் புவியியல் அரசியலைத் தவிர்த்து மனிதாபிமனாத்தைப் பேணுகின்ற ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எமக்கான நீதியை வழங்குவதற்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஈழத்தமிழினம் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது இனப் படுகொலையே என்பதைக் கூறுவதன் மூலம் எங்கள் இனத்துக்கு நீதி கிடைக்கச் செய்யுங்கள் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர்.