
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; அரசில் இருக்கும் சிலரில் சந்தேகம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் இந்த அரசாங்கத்துடன் தொடர்புகளை கொண்டுள்ளார்களா? என்ற சந்தேகங்கள் எழுவதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார கூறியிருந்தார். அவரின் தேர்தல் வாக்குறுதியிலும் இது குறிப்பிடப்பட்டிருந்ததுடன், கடந்த ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் அதனை வெளியிடுவதாகவும் கூறியிருந்தார். ஆனால் அது தொடர்பில் இப்போது எதனையும் காணவில்லை. ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் இந்த அரசாங்கத்தை பிடித்துக்கொண்டிருக்கின்றார்களா? என்ற சந்தேகங்கள் எழுகின்றது. அதனாலேயே நாங்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரும் போது அதற்கு இடமளிக்காமல் இருக்கின்றனர். அவர் பிரதி அமைச்சர் என்பதனால் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முடியாது என்று நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரிக்கின்றனர்.
இவர்களிடம் 159 பேர் இருக்கின்றனர். அப்படியென்றால் ஏன் இவர்கள் பயப்பட வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல்கள் வெளியிடுவதாக நாள்களையும் குறிப்பிட்ட ஜனாதிபதியின் அரச பொறிமுறையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் இருக்கின்றார்களோ என்ற சந்தேகங்கள் எழுகின்றன. முன்னாள் ஜனாதிபதிகள் செய்தவற்றையே இந்த ஜனாதிபதியும் முன்னெடுக்கின்றார். வெளிப்படைத் தன்மையோ, சட்டவாட்சியோ இந்த அரசாங்கத்திடம் காண முடியவில்லை என்றார்.