
இனி இந்த திருடர்களால் நாட்டை உருவாக்க முடியாது என்பதனை நாம் நிரூபித்துள்ளோம்
இந்த திருட்டு கூட்டத்திற்கு மீண்டும் மக்கள் ஆதரவு வழங்கப்போவதில்லை. இனி இந்த திருடர்களால் நாட்டை உருவாக்க முடியாது என்பதனை நாங்கள் நிரூபித்து காட்டி இருக்கின்றோம் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவி ஏற்று ஒரு வருட நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பில் இருந்து கண்டி ஊடாக கம்பளைக்கான புதிய பஸ் சேவை ஞாயிற்றுக்கிழமை மாலை ஆரம்பித்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துச்சபையின் முகாமையாளர் த.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரபு எம்.பி.
ஜனாதிபதி இந்த நாட்டை பொறுப்பேற்றிய ஒரு வருட காலம் கடந்திருக்கின்றது இந்த ஒரு வருட காலத்துக்குள் பல வேலை திட்டங்களை முன்னெடுத்து இருக்கின்றோம் .இதனைப் பொறுத்துக் கொள்ளாமல் அலிபாபாவும் 40 திருடர்களும் என்பது போன்று அந்த திருடர் கூட்டம் இன்று ஒன்றாக சேர்ந்து இருக்கின்றது இந்த காலகட்டத்தில் மக்களால் வெறுக்கப்பட்ட கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவுக்காக இவர்கள் ஒன்று சேர்ந்திருக்கின்றார்கள்.
இதில் மொட்டு கட்சியை சார்ந்தவர்களும் சுதந்திர கட்சியைச் சார்ந்தவர்களும் அதனைப் போன்று திகாம்பரம், ஹிஸ்புல்லா போன்ற தலைவர்களும் அங்கு ஒன்று கூடி இருந்தார்கள். இவர்கள் இந்த நாட்டை மீண்டும் ஒரு மோசமான சூழ்நிலைக்கு அதள பாதாளத்திற்கு கொண்டு சேர்த்து இந்த நாட்டை ஒரு வங்குரோத்து அடைந்த நாடாக மாற்றுவதற்கு இவர்கள் மீண்டும் முயற்சி செய்கின்றார்கள்.
மக்களுக்கு திருடர்கள் யார் நல்லவர்கள் யார் என்று தெரிவித்து விட்டது. ஆகவே இந்த திருட்டு கூட்டத்திற்கு மீண்டும் மக்கள் ஆதரவு வழங்கப்போவதில்லை. இனி இந்த திருடர்களால் நாட்டை உருவாக்க முடியாது என்பதனை நாங்கள் நிரூபித்து காட்டி இருக்கின்றோம்.
நாங்கள் ஒரு சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் இந்த நாடு பொருளாதாரத்தில் சிறப்பு அடைந்து கொண்டிருக்கின்றது.
அரசியல் ஸ்திரத்தன்மை ஊடாக வெளிநாட்டு நிறுவனங்களும் வெளிநாட்டு அரசு தலைமைகளும் எங்கள் நாட்டு தலைவர் மீது அக்கறையோடு ஒன்று இணைந்து செயல்படுவதற்கு தயாராக இருக்கின்றார்கள் என்றார்.