
இனத்துக்காகத் தன் இன்னுயிரை ஆகுதியாக்கிய திலீபனின் தியாகம் இந் நாட்டில் தமிழ்மக்கள் வாழும் காலம் முழுவதும் பேசப்படும்
தனது இனத்துக்காகத் தன் இன்னுயிரை ஆகுதியாக்கிய இந்த தியாகம் இந் நாட்டில் தமிழ்மக்கள் வாழும் காலம் முழுவதும் பேசப்படும். திலீபன் நினைவாலயம் தொடர்ந்து தமிழ்மக்களது வரலாற்றில் இன்றியமையாத இடத்தைப் பெற வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நல்லூரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்ட தியாகதீபம் திலீபனின் ஆவணக் காட்சியகத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதன்முறையாகச் சென்று பார்வையிட்ட பின்னர் ஆவணக் காட்சியகத்துக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் கருத்துப் பதிவேட்டில் அவரது கையெழுத்துடன் இட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் அங்கு சென்ற சுமந்திரன், திலீபனின் உருவச் சிலைக்கு முன்பாக அஞ்சலி செலுத்தியதுடன் ஆவணக் காட்சியகத்தையும் முழுமையாகப் பார்வையிட்டுள்ளார்.