ரணிலுடனும் மைத்திரியுடனும் இணைந்து வடக்கில் குட்டி ஜனாதிபதியாக வலம் வந்தவரே சுமந்திரன்

ரணிலுடனும் மைத்திரியுடனும் இணைந்து வடக்கில் குட்டி ஜனாதிபதியாக வலம் வந்தவரே சுமந்திரன்

முன்னைய ஆட்சி காலத்தில் ரணிலுடனும் மைத்திரியுடனும் வடக்கு மாகாணத்தில் குட்டி ஜனாதிபதியாக சுமந்திரன் வலம் வந்தார் எனத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், இப்போதும் குட்டி ஜனாதிபதியாக வடக்கை வலம் வர வேண்டும் என்று ஆசை சுமந்திரனுக்கு இருக்கிறது. அது நப்பாசையாக தான் முடியும் என்றார்.

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு உள்ளூராட்சி சபைத் தவிசாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுவது தொடர்பாக சுமந்திரன் வெளியிட்ட கருத்து தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இளங்குமரன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர்களை நாங்கள் புறக்கணிக்கவில்லை. மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்படாதவர்களே இதனை கூறுகிறார்கள். தாங்கள் என்ற அகங்காரம் பிடித்தவர்களாக இருக்கிறார்கள். தங்களைத் தான் அழைக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். தங்களுக்கு கீழ் அனைவரும் இருக்க வேண்டும் என்று சுமந்திரன் நினைக்கிறார். முதலில் அவரது கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து ஒரே குரலில் பயணிக்குமாறு நான் தாழ்மையுடன் கேட்கிறேன். அவர் சர்வாதிகார போக்கில் செயற்படுகிறார். மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்ல. மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை நாம் அழைக்கின்றோம்.

யாழ்ப்பாண பொது நூலகம் இணைய மயமாக்க தீர்மானித்தோம். மாநகர முதல்வரையும் அழைத்து அவரை உரையாற்றும் படியும் கேட்டோம். அவருக்கு ஏனோ தெரியாது, சிறிது காலம் யோசித்துச் சொல்வதாக கூறிவிட்டு அழுத்தம் ஏற்பட்டதாக நான் நினைக்கின்றேன். அழுத்தம் பிரயோகிக்காமல் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை சுயமாக இயங்க விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அனுரவுக்கு வாக்களித்த மக்கள் இன்று கவலைப்படுகின்றார்கள் என்று சுமந்திரன் கூறியிருந்தார். அவர் நித்திரை கொண்டு எழும்பி வந்தாரோ தெரியாது. அவர் ஜனநாயக முறைப்படி வாக்களால் தெரிவு செய்யப்பட்டு வந்து கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்கிறோம்.

ஜனாதிபதி அனுர செயற்படும் விதத்தை மக்கள் விரும்புகிறார்கள். சுமந்திரன் கூறும் கருத்துக்கள் குறித்து அலட்டிக் கொள்ள தேவையில்லை. அவர் யூடியூப்பில் பல கருத்துக்களை கூறி வருகிறார். ரணிலுடனும் மைத்திரியுடனும் இணைந்து வடக்கு மாகாணத்தில் குட்டி ஜனாதிபதியாக வலம் வந்தார். குட்டி ஜனாதிபதியாக வடக்கை வலம் வர வேண்டும் என்று ஆசை அவருக்கு இருக்கிறது. அது நப்பாசையாக தான் முடியும் – என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )