ம.தி.மு.க மாநாட்டில் இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானம்!

ம.தி.மு.க மாநாட்டில் இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானம்!

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைக்கு, இந்திய மத்திய அரசாங்கம் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திருச்சியில் நடைபெற்ற ம.தி.மு.க மாநாட்டில் 12 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கை தொடர்பாக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இராமேஸ்வரம் அருகே, பாம்பனிலிருந்து விசைப்படகில், கடந்த ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 10 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

அவர்கள் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த, செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி, அந்தக் கடற்றொழிலாளர்களுக்கு, தலா 5 கோடி ரூபாய் வீதம் 50 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் தமிழகக் கடற்றொழிலாளர்களை,
இலங்கை கடற்படை கைது செய்வதும், அபராதம் விதிப்பதும் கடும் கண்டனத்திற்குரியது என்றும் குறித்த மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை அரசின் இத்தகைய செயற்பாடுகளைத் தொடர்ந்தும் இந்திய அரசாங்கம் வேடிக்கை பார்ப்பது கடற்றொழிலாளர் சமூகத்தைக் கொந்தளிக்கச் செய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )