
தமிழின அழிப்பின் நிகழ்ச்சி நிரலை கச்சிதமாக முன்னெடுக்கும் ஆட்சியாளர்கள்
தென்னிலங்கையில் ஊழல் ஒழிப்பு என்ற போர்வையில் பெரும் ஊழல்களை விட்டு சிறிய ஊழல்களை வைத்து எதிர்காலத்தில் தங்களின் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கக் கூடிய எதிர்த் தரப்புக்களை மக்கள் மத்தியில் ஊழல்வாதிகள், போதைப்பொருள் வியாபாரிகள், அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் என்ற முத்திரை குத்தி நீதிமன்றங்களில் வழக்குகளை தொடுத்து நெருக்கடிகளை கொடுத்துக் கொண்டு வடக்கில் ஊழல் ஒழிப்பின் திரைக்குப் பின்னால் கடந்த கால ஆட்சியாளர்கள் முன்னெடுத்த தமிழ் இன அழிப்பை தொடர்வதற்கு பாரிய முஸ்தீவை ஏற்படுத்தி உள்ளது. அநுர அரசு என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைத்தீவின் பாரிய அரசியல் மற்றும் பொருளாதார பின்னடைவுக்கு காரணமான 76 ஆண்டுகளாக புரையோடிப் போயுள்ள தேசிய இனப்பிரச்சினையை கண்டுகொள்ளாமல் ஊழல் ஒழிப்பு என்ற மாயைக்குள் தமிழ் மக்களை வைத்துக் கொண்டு தமிழின அழிப்பின் நிகழ்ச்சி நிரலை கச்சிதமாக முன்னெடுக்கின்றனர் ஆட்சியாளர்கள்.
வவுனியா வடக்கில் பெரும் காடழிப்புடன் 6000 சிங்கள குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கைகள் தீவிரம் பெற்றுள்ளன. இறுதிப் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் நீதியை நீர்த்துப் போகச் செய்வதற்கு கடந்த கால ஆட்சியாளர்களைப் போல ஐெனிவாவில் உள்ளகப் பொறிமுறையில் கால எல்லை ஊடாக மீண்டும் கால நீடிப்பை பெற்று தமிழ் இனத்துக்கான நீதியை அழிக்க தயாராகி உள்ளனர்.
நீதிப் பொறிமுறையில் இரட்டை நிலைப்பாட்டை அநுர அரசாங்கம் முன்னெடுப்பது பாதிக்கப்பட்ட மக்களை வேதனைக்குள் தள்ளியுள்ளது.
பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்று கூறும் சம நேரம் ஐெனிவாவில் உள்ளக பொறிமுறையில் நீதி வழங்குவதாக தீர்மானிப்பது அநுர அரசாங்கத்தின் பெரும் பித்தலாட்டம்.
தமிழர் தாயகத்தில் கடந்த கால ஆட்சியாளர்கள் மேற்கொண்ட சட்டவிரோத செயற்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுக்கும் அநுர அரசாங்கம் தமிழர் விவகாரத்தில் பௌத்த சிங்கள இனவாத்தில் உறுதியாக உள்ளனர் என தெரிவித்தார்.