
ஜனாதிபதி பதவிக்கு மூவர் களத்தில் ரணில்- டலஸ் கடும் போட்டி; இன்று பாராளுமன்றில் இரகசிய வாக்கெடுப்பு
ஜனாதிபதி பதவியிலிருந்து கோத்தபாய ராஜபக்ச விலகிய நிலையில் புதிய ஜனாதிபதி பதவிக்காக தற்போதைய பதில் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க , ஜே .வி.பி. தலைவரும் எதிரிக்கட்சி எம்.பியுமான அநுர குமார திஸாநாயக்க, ஆளும் கட்சியான பொதுஜன பெரமுன வின் எம்.பி யான டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டன.
ஜனாதிபதி பதவியிலிருந்து கோத்தபாய ராஜபக்ச விலகிய நிலையில் புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக் கோரலுக்காக பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போது ஜனாதிபதி வேட்பாளராக ஆளும் கட்சியான பொதுஜன பெரமுன வின் எம்.பி யும் முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப்பெருமவை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிய, ஆளும் கட்சியான பொதுஜன பெரமுன வின் தவிசாளரும் எம்.பி.யுமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வழிமொழிந்தார்.
இதேபோன்று ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய பதில் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவை, சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன முன்மொழிய பிரதான எதிர் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து அண்மையில் அரசுப்பக்கம் சென்று அமைச்சுப்பதவி பெற்ற மனுஷ நாணயக்கார எம்.பி. வழிமொழிந்தார்.
அடுத்ததாக ஜனாதிபதி வேட்பாளராக ஜே .வி.பி. தலைவரும் எதிரிக்கட்சி எம்.பியுமான அநுர குமார திஸாநாயக்கவை அவரின் கட்சியை சேர்ந்தவர்களான விஜித ஹேரத் எம்.பி. முன்மொழிய ஹரிணி அமரசூரிய எம்.பி. வழிமொழிந்தார்.
இந்த பிரேரிப்புக்களை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஏற்றுக் கொண்டதையடுத்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு சபையில் இடம்பெறும் என அறிவித்தார்.
இதனை அடுத்து சபை அமர்வு இன்று புதன்கிழமை காலை 10 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

