உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம்; போராட்டத்திற்கு ஆதரவு வழங்குக!

உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம்; போராட்டத்திற்கு ஆதரவு வழங்குக!

வட கிழக்கில் எதிர்வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு அனைத்து தமிழ் தேசிய சக்திகளையும் ஆதரவு வழங்குமாறு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எதிர்வரும் 30 ஆம் திகதி மட்டக்களப்பில் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கங்கள் இணைந்து பழைய கல்லடி பாலத்திலிருந்து முன்னெடுக்கப்படவுள்ள சர்வதேச நீதிகோரிய கவன ஈர்ப்பு பேரணி தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்   மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கங்களின் தலைவிகள்,உறுப்பினர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு நீதிபொறிமுறையில் 17வருடமாக நம்பிக்கையிழந்த நிலையில் தொடர்ச்சியாக சர்வதேச நீதிப்பொறிமுறையினை கோரிவரும் நிலையில் எதிர்வரும் ஐநா மனித உரிமைகள் அமர்வின்போது தமது கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையிலான தீர்மானத்தினைக்கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்திலிருந்து சர்வதேச நீதிகோரிய பேரணி ஆரம்பமாகி புதிய கல்லடி பாலத்தின் ஊடாக காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபி வரையில் பேரணி நடைபெறவுள்ளது.

அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றும் நடாத்தப்படவுள்ளதுடன் சர்வதேச நீதிகோரி ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதற்கான அறிக்கைவாசிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த போராட்டம் வெறுமனே வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டமாக கருதாமல் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் போராட்டமாக நடாத்துவதற்கு அனைவரையும் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குமாறு இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )