
அரசிற்குள் மோதலில்லை ஹரிணியே பிரதமர்
அரசாங்கத்திற்குள் எவ்வித மோதலும் கிடையாது என்றும், பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படப் போவதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.அரசாங்கத்திற்குள் தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.) -ஜே.வி.பி மோதல் நிலைமை உருவாகியுள்ளதாகவும், தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி விலகச் செய்து பிமல் ரத்நாயக்கவை பிரதமராக நியமிக்க திட்டமிடப்படுவதாகவும் வெளியாகும் செய்திகள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவை பேச்சாளர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்கத்திற்குள் முறுகல்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால் அவ்வாறு எவ்வித முரண்பாடுகளும் அரசாங்கத்திற்குள் கிடையாது. சிலர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன. ஆனால் அவ்வாறு எவ்வித பிரச்சினைகளும் கிடையாது. ஊடகங்களே இவ்வாறான செய்திகளை தயாரித்து வெளியிட்டு இவ்வாறு செய்திகள் உண்மையா? என்று கேட்கின்றனர்.
எவ்வாறாயினும் பிரதமர் பதவியை மாற்றுவதற்கு எவ்வித எண்ணமும் அரசாங்கத்திற்கு கிடையாது. நாட்டை கட்டியெழுப்புவதற்காக கூட்டுப்பொறுப்புடன் அமைச்சரவை செயற்படுகின்றது. ஒவ்வொரு அமைச்சு தொடர்பிலும் புரிந்துணர்வுடன் நாங்கள் செயற்படுகின்றோம். இப்போது எதாவது விழும் என்று சஜித், நாமல் ஆகியோர் காத்துக்கொண்டிருக்கின்றனர். அவ்வாறு காத்திருப்பதால் எந்தப் பலனும் கிடையாது. நாங்கள் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம் என்பதுடன், அரசியல் கலாச்சாரத்தையும் மாற்றுவோம். இதனை பார்த்துக்கொண்டிருங்கள். இவ்வேளையில் பொய்யான செய்திகளுக்கு பதிலளிப்பதிலும் பிரயோசனம் இல்லை.
இதேவேளை சுப்ரீம் சட் செய்மதி தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்கள் முதலீட்டு சபையின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டதே. அவ்வாறு வழங்கப்பட்ட தகவலில் ஏதேனும் புள்ளி விபர குறைபாடுகள் இருந்திருக்கலாம். இதனை அடிப்படையாக் கொண்டே அரசாங்கத்திற்கு முரண்பாடுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. ஆனால் உண்மையில் அந்த செய்மதியால் நாட்டுக்கு நன்மையோ வருமானமோ கிடைத்திருந்தால் அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்கள் கூறியிருப்பார்கள். ஆனால் அவ்வாறு இல்லாத காரணத்தினாலேயே பேசாமல் இருந்துள்ளனர் என்றார்.