
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை காக்க எதிரணி முயற்சி!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மற்றும் அதன் உண்மையான குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டிய தேவை எதிர்க்கட்சியினருக்கு இருப்பதாக கருதுவதாகவும், இதில் ஒரு அங்கமாகவே பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணை அமைவதாகவும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளமை தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அமைச்சரவை பேச்சாளர் மேலும் கூறுகையில்,
எதிர்க்கட்சியினருக்கு தேவையானவாறு நாங்கள் செயற்படப் போவதில்லை. அதேபோன்று எதிர்க்கட்சியினருக்கு தேவையானவாறு உண்மையான விசாரணைகளை மூடி மறைப்பதற்கான குண்டுகளுக்கு நாங்கள் சிக்கப் போவதும் இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை சரியான முறையில் நடக்காத போது, சஜித் பிரேமதாச தரப்பினரால் அவ்வாறான ஒருவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அதன்பின்னர் நாங்கள் விசாரணை நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுத்து இதன் பிரதான சூத்திரதாரி, இதற்கு உதவியவர்கள் மற்றும் இதன்மூலம் அரசியல் லாபம் தேடியவர்கள் தொடர்பில் முறையாக விசாரணைகளை முன்னெடுக்கையிலேயே சஜித் பிரேதாச மற்றும் முஜிபூர் ரஹுமான் குழுவினருக்கு ஒவ்வொரு சம்பவத்தை இதனுடன் தொடர்புபடுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இதில் தகவல்கள் கிடைத்திருந்த போதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறிய ஒரு குழுவினர் உள்ளனர். அத்துடன் இந்த தாக்குதலுக்கு நேரடியாக பொறுப்புக் கூற வேண்டிய குழுவொன்றும் உள்ளது. அதற்காகவே குற்றப் புலனாய்வு திணைக்களம் முறையான விசாரணைகளை முன்னெடுக்கின்றது.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற விசாரணை குழுவில் சஜித் பிரேமதாசவுடன் இருந்த எம்.பிக்கள் இருக்கின்றனர். அப்போது குறிப்பிடப்படாத பெயர், ஜனாதிபதி ஆணைக்குழுவில் குறிப்பிடப்படாத பெயர் இப்போது எப்படி நினைவுக்கு வந்தது. இப்போது அரசாங்கத்தில் உள்ள ஒருவரை இதனுடன் தொடர்புபடுத்த ஏன் முயற்சிக்க வேண்டும். இதில் தெளிவான நோக்கமொன்று உள்ளது. அதாவது பிரதான சூத்திரதாரி மற்றும் இதன் உண்மையான குற்றவாளியை மறைப்பதற்கு எதிர்க்கட்சிக்கு தேவையொன்று உள்ளதாக தெரிகின்றது.
ராஜபக்ஷக்களுக்கு மட்டுமே இவ்வாறான தேவை இருப்பதாகவே முன்னர் நினைத்தோம். ஆனால் சஜித் உள்ளிட்ட எதிர்க்கட்சியினருக்கும் அந்தத் தேவை இருப்பதாகவே தெரிகின்றது. அவ்வாறு இருக்க வாய்ப்பு உள்ளது. உள்ளூராட்சி சபைகளில் ஒன்றாக சபைகளை அமைக்க எடுத்த முயற்சிகளை பார்க்கையில் அவ்வாறு இருக்கலாம். ஒருபோதும் நாங்கள் பயப்படப்போவதில்லை. நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வாருங்கள். முன்னர் வெளியாகாத தகவல்களும் பின்னர் வெளியாகும் என்றார்.