
சமகால நெருக்கடிகள் தொடர்பில் பேச ஜனாதிபதியை சந்திக்க முயலும் சிறீதரன் எம்.பி.
வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் சமகால நெருக்கடிகள் தொடர்பில் சந்தித்து கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி. யுமான சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்
இது தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது,
வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் சமகால நெருக்கடிகள் தொடர்பிலும். ஈழத்தமிழர்களின் அரசியல் சார்ந்த கீழ்வரும் விடயங்கள் தொடர்பிலும், தமிழ் மக்களின் பிரதிநிதியாக தங்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவது காலப்பொருத்தமானதாக அமையும் என எதிர்பார்க்கிறேன்.
தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு முயற்சிகள் குறித்த பேச்சுகளை ஆரம்பித்தல்,
தமிழ் அரசியற்கைதிகளின் வீடுதலை,இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் காணிகளின் விடுவிப்பு, யாழ்ப்பாண மாவட்டம், வலிகாமம் வடக்கின் மயிலிட்டி உள்ளிட்ட பகுதிகளின் மீள்குடியேற்றம், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான கைதுகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர்கள் மீதான விசாரணைகளும் அச்சுறுத்தல்களும், மக்களின் இயல்புவாழ்வைப் பாதிக்கும் வகையிலான சிவில் நடைமுறைகளில் நிலவும் இராணுவத் தலையீடுகள் குறித்து கலந்துரையாட வேண்டியுள்ளது.
இலங்கை நாட்டின் தேசிய இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் கரிசனையோடிருக்கும் தங்களுடன் மேற்குறித்த விடயங்கள் சார்ந்து தமிழ்த் தரப்பின் பிரதிநிதியாக கலந்துரையாடுவதன் மூலம், குறித்த விடயயங்களுக்கான தீர்வுகளை எட்ட முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், அத்தகைய சந்திப்பு ஒன்றை தங்களுக்குப் பொருத்தமான நேரத்தில் ஒழுங்கமைக்க ஆவன செய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.