
தமிழகத்தில் முகாம்களிலுள்ள 60 இலங்கையர்கள் நாடு கடத்தப்படுவர்?
காஸ்மீரின் பஹல்கம்மில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை அடுத்து, இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை நாடு கடத்தும் செயற்பாடுகள் தீவிரமாகியுள்ள நிலையில்,தமிழகத்தில் முகாமில் உள்ள 60க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களும் நாடு கடத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து பங்களாதேஷ் நாட்டவர்களே அதிகமாக நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்த நடவடிக்கை தற்போது, இந்தியாவில் பதிவுகள் இன்றி தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் ஒரு கட்டமாக தமிழக நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மறுவாழ்வு முகாமில் உள்ள 60க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் உரிய வீசா இன்றி நாட்டில் தங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது
இவர்கள் சுற்றுலா வீசாவிலேயே நாட்டுக்குள் வந்துள்ளதாக தமிழக தகவல்கள் கூறுகின்றன.
இந்தநிலையில்,இவர்கள் தொடர்ந்தும் தங்க வேண்டுமாயின் நீண்ட கால வீசாவைபெற்றுக் கொள்ள வேண்டும் அல்லது 10 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர்கள் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

