நாட்டில் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள மகிந்தவை விட அநுரவுக்கு பாதுகாப்பு மிகவும் அதிகம்

நாட்டில் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள மகிந்தவை விட அநுரவுக்கு பாதுகாப்பு மிகவும் அதிகம்

நாட்டில் அதிகளவான பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை விடவும் அதிகளவான பாதுகாப்பு பிரிவை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார கொண்டுள்ளார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசமே இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதிகளுக்கும் எம்.பிக்களுக்கும் முன்னர் பாதுகாப்புகள் வழங்கப்பட வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை. ஆனால் 89ஆம் ஆண்டு காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியினர் அரசியல்வாதிகளை கொலை செய்தமை மற்றும் துப்பாக்கி சூடுகளை நடத்தியதைத் தொடர்ந்தே அரச தலைவர்களுக்கும் எம்.பிக்களுக்கும் பாதுகாப்பை வழங்க வேண்டிய நிலைமை உருவாகியது.

அதன் ஒரு பகுதியாகவே விடுதலைப் புலிகளை ஒழித்த மகிந்த ராஜபக்‌ஷவுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இரகசிய உளவு சேவையினால் இலங்கையில் அதிக பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் தலைவராக மகிந்த ராஜபக்‌ஷ குறிப்பிடப்பட்டுள்ளார். ஆனால் இந்தப் பாதுகாப்பை வழங்குவது மக்களின் குரோதத்திற்கு உள்ளாக்கும் வகையில் ஜே.வி.பியினர் கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

அரச தலைவர்கள், எம்.பிக்களுக்கு பொலிஸ் பாதுகாப்போ வேறு ஏதேனும் பாதுகாப்போ வழங்கப்பட வேண்டியதில்லை. அவர்கள் சாதாரண மக்களால் நியமிக்கப்படுபவர்கள் என்று கூறியிருந்தனர். இவ்வாறான குரோதத்தை மக்களிடையே பரப்பியே அவர்கள் ஆட்சிக்கு வந்தனர்.

ஆனால் பதவிக்கு வந்த பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்த நாட்டின் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து இந்த நாட்டை மீட்டெடுத்த தலைவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை விடவும் அதிகளவாக பாதுகாப்பை பயன்படுத்துவதாக தெரிகின்றது. அத்துடன் இந்த பாதுகாப்பு போதாது இன்னும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் லால்காந்த கூறியுள்ளார். இவ்வாறு எந்தளவுக்கு ஏமாற்றியுள்ளனர் என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )