
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் அடுத்த வருடத்தில் பொதுத் தேர்தல் !
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஓரணியில் வருமாக இருந்தால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்த்து அடுத்த வருடத்தில் பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக புதிய அரசாங்கத்தை அமைக்க முடியுமென்று பிவித்துறு ஹெல உறுமய தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைமையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அடுத்த வருடத்தில் இந்த நேரத்தில் நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும். அதாவது 2028ஆம் ஆண்டில் இந்த நாடு கடன் செலுத்தும் நாடாக மாற வேண்டுமாயின் வருடாந்தம் தொடர்ச்சியாக 5 வீத பொருளாதார வளர்ச்சியை பேண வேண்டும். 2024ஆம் ஆண்டில் அவ்வாறு நடந்தது. ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பின்படி 2025ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி வேகம் 3.5 ஆகவும் 2026ஆம் ஆண்டில் அது 3.1 வீதமாகவும் இருக்கும். இதன்படி எமது பொருளாதார வளர்ச்சி தொடந்தும் சுருங்கிக்கொண்டு வருகின்றது. இதனால் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கை எட்ட முடியாமல் நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கும். இது டிரம்ப் வரியை அறிவிக்க முன்னர் இருந்த நிலைமையே. இதற்கு பின்னர் இந்த நிலைமை வேறாக இருக்கலாம்.
இந்நிலையில் நாட்டில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் அடுத்த வருடத்தில் இந்நேரத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கு நாட்டை தள்ளி நாட்டை நடத்திச் செல்லக்கூடியவர்களுக்கு நாட்டை ஒப்படைக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கலாம். ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஓரணியாக வர வேண்டும். இதுதான் இல்லை. நான் ஜனாதிபதியாவேன் என்று அனைவரும் நினைக்கலாம். ஆனால் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யும் பொறுப்பை மக்களுக்கு ஒப்படைத்து, யார் ஜனாதிபதியானாலும் நாங்கள் ஒன்றாக இருப்போம் என்ற இணக்கத்திற்கு எதிர்க்கட்சிகள் வருமாக இருந்தால் அடுத்த வருடத்தில் பாராளுமன்றத் தேர்தலை பெற்றுக்கொள்ள முடியும். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகளை என்னால் முன்னெடுக்க முடியும். இதன்படி ஜனாதிபதியை தெரிவு செய்யும் பணிகளை மக்களிடம் ஒப்படைத்துவிட்டு அரசாங்கத்தை கவிழ்க்கும் வேலையை எதிர்க்கட்சிகளின் கையில் எடுப்போம் என்றார்.