
கோட்டாவை திருப்பியனுப்ப கோரி மாலைதீவு வாழ் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்
மாலைதீவில் வசிக்கும் இலங்கையர்கள் குழுவொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் சோலியின் வீட்டிற்கு அருகில் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனாதிபதியை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதிகாலை இலங்கையிலிருந்து வான்படை விமானம் மூலம் மாலைதீவுக்கு சென்றுள்ளார்.
அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதியும் அவரது மனைவியும் செல்வதற்கு விமானம் வழங்கியதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பதவி விலகவுள்ளதாக சபாநாயகர் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். ஜனாதிபதி இன்று காலை இலங்கை விமானப்படைக்கு சொந்தமான Antonov 32 ரக விமானத்தில் மாலைதீவு சென்றுள்ளார்.
ஜனாதிபதியைத் தவிர, அவரது மனைவி மற்றும் அவர்களின் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
அmவர்கள் மாலைதீவுக்கு விஜயம் செய்ததைக் காட்டும் காணொளி ஒன்றும் உள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதை பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது

