
போர்க்குற்ற பொறுப்புக்கூறலை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்துங்கள்; ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளரிடம் வலியுறுத்தல்
இலங்கையில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போர்க்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் விவகாரத்தை சர்வதேச குற்றவியில் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் கூட்டாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளரிடம் மகஜர் கையளித்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளரிடம் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் கடிதம் ஒன்று
அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கூட்டாக கையொப்பமிட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் நேரில் கையளிக்கப்பட்டது.
நேற்று பி.ப 3 மணியளவில் யாழ் கோவில் வீதியில் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போது குறித்த இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ள சிவில் சமூகத் தரப்பினரால் ஆணையாளரிடம் நேரில் கையளிக்கப்பட்டது.
இந்த அறிக்கையில் தமிழ்த் தேசிய பேரவை தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி ,இலங்கை தமிழரசு கட்சி பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம்,ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி இணைத் தலைவர்களான – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி த.சித்தார்த்தன் ,தமிழ்த் தேசிய கட்சிதலைவர் ந.சிறீகாந்த ,ஜனநாயக தமிழரசு கட்சி தலைவர் கே.வி.தவராசா , தமிழ் சிவில் சமூக அமையம் பி.என்.சிங்கம்,தமிழ்த் தேசிய பசுமை இயக்கத் தலைவர் பொ.ஐங்கரநேசன்,சிவகுரு ஆதீனம் வேலன் சுவாமிகள்,வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்க செயலாளர் யோ.கனகரஞ்சினி,திருகோணமலை தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள்,இலங்கை ஆசிரியர் சங்க உபதலைவர் ஆ.தீபன்தலீசன்,கிராமிய உழைப்பாளர் சங்க தலைவர்ந. இன்பநாயகம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் க.பிறேமச்சந்திரன்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் சமத்துவக் கட்சி பொதுச் செயலாளர் மு.சந்திரகுமார்ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்