
குச்சவெளி மீனவர் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதியளித்தது யார்?
குச்சவெளி மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்தும் அனுமதியை கடற்படைக்கு கொடுத்து யார்? சுருக்கு வலைக்கான அனுமதிப்பத்திரம் காலி,அம்பாந்தோட்டை,மாத்தறை போன்ற பிரதேசங்களில் பயன்படுத்தப்படுகின்றநிலையில் வடக்கு,கிழக்கில் மட்டும் இதற்கு தடை ஏன் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலைமாவட்ட எம்.பி. இம்ரான் மஹ்ரூப் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,
குச்சவெளியில் செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.மீனவர்களுக்கிடையிலான பிரச்சினையாக காணப்பட்ட நிலையில் அது துப்பாக்கி சூட்டில் முடிந்தது. இதில் ஒரு இளைஞன் காயமடைந்துள்ளார். குச்சவெளி ஜாஜா நகர் பிரதேசத்தில் பள்ளிமுனை பிரதேசத்தில் காணப்படுகின்ற அய்யூப்கான் ஐனூஸ் என்று சொல்லப்படுகின்ற 23 வயது .இளைஞனே காயமடைந்துள்ளார்.
இந்த மீனவர்களின் பிரச்சினைகளை நாம் இங்குள்ள அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.அதனடிப்படையில் கடற்தொழில் திணைக்களத்தால் முறையாக வழங்கப்பட்டுள்ள சுருக்குவலை அனுமதிப்பத்திரம் பெற்று மீனவர்கள் தாக்கப்பட்டுள்ள இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது.
இந்த சுருக்குவலை அனுமதிப்பத்திரத்திலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த 7 மைல் நிபந்தனை தான் பிரதான காரணமாகவுள்ளது. இந்த நிபந்தனை திருகோணமலை மாவட்டத்தைப்பொறுத்தவரை குடாப்பகுதிகளுக்கு பொருத்தமற்ற நிபந்தனையாக காணப்படுகின்ற காரணத்தினால்தான் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
முஸ்லிம்கள் ஹஜ்ஜூப்பெருநாளை எதிர்கொள்கின்ற இந்த நேரத்தில் அந்த பிரதேசத்தில் இருக்கின்ற மீனவர்கள் வருமானத்தை ஈட்டிக்கொள்கின்ற வகையில் கடலுக்கு செல்கின்ற நிலையில் இவர்கள் தீவிரவாதிகளாக,போதைப்பொருளை கடத்துபவர்களாக கருத்தில் கொண்டு தாக்கப்பட்டுள்ளார்கள். எனவே இந்த தாக்குதல் தொடர்பில் சரியான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த மீனவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கான அனுமதியை கடற்படையினருக்கு யார் கொடுத்தது? இந்த துப்பாக்கி பிரயோகத்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்குமானால் நிலைமை என்ன?முன்னர் இந்த நிபந்தனையை மீனவர் மீறினால் கடற்படையினர் பொருட்களை பறிமுதல் செய்வார்கள், எச்சரிப்பார்கள். ஆனால் இன்று துப்பாக்கி சூடு நடத்தும் நிலைக்கு வந்துள்ளார்கள் இந்த சம்பவம் அந்தப்பிரதேசத்தில் இனவாதமாகவே பார்க்கப்படுகின்றது.
சுருக்கு வலைக்கான இந்த அனுமதிப்பத்திரம் காலி,அம்பாந்தோட்டை,மாத்தறை போன்ற பிரதேசங்களில் பயன்படுத்தப்படுகின்றது.ஆனால் இதனை வடக்கு,கிழக்கில் பயன்படுத்துகின்றபோது இந்த அனுமதிக்கு தடை என்ற நிலைப்பாடு காணப்படுகின்றது. நாட்டிலே சுருக்கு வலைக்கு தடை என்றால் நாடு முழுவதும் தடை செய்யப்பட வேண்டும். ஆனால் பிரதேச ரீதியாகவே தடை செய்யப்படுகின்றது.அதனால்தான் இதனை இனவாதமாக பார்க்க வேண்டியுள்ளது என்றார்.