ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக இடம்பிடித்த யாழ்., பல்கலைக்கழக பேராசிரியர்

ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக இடம்பிடித்த யாழ்., பல்கலைக்கழக பேராசிரியர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் சிங்கப்பூரிலிருந்து வெளியிடப்படும் ‘ஆசிய விஞ்ஞானி’ எனும் முன்ணணி சஞ்சிகையின் தலைசிறந்த ஆசிய விஞ்ஞானிகள் நூறு பேரின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த பட்டியல் ஆசியாவிலுள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளின் விசேட சாதனைகளை அங்கீகரிக்கிறது.

பொதுவாக இந்த பட்டியலில் தேர்வு செய்யப்படும் தலைசிறந்த விஞ்ஞானிகளின் ஆய்வு வெளியீட்டுக்கப்பால் தேசிய அல்லது சர்வதேச விருதை பெற்றிருக்க வேண்டும்.

முக்கியமான விஞ்ஞான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லது கல்விசார் அல்லது தொழில்சார் தலைமைத்துவத்தை வழங்கியிருக்க வேண்டும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானப் பீடாதிபதியாக கடந்த ஜந்து ஆண்டுகளாக பணியாற்றிவரும் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் பல தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவற்றில் துணைவேந்தர்கள் இயக்குனர்கள் சபையினரால் வழங்கப்பட்ட பௌதிக விஞ்ஞானத்திற்கான அதி சிறந்த இள ஆராய்ச்சியாளர் விருது தேசிய விஞ்ஞான மன்றத்தினால் (National Science Foundation, NSF) வழங்கப்பட்ட இள விஞ்ஞானி விருது மற்றும் தேசிய ஆராய்ச்சி பேரவை (National Research Council, NRC) பல தடவைகள் வழங்கிய சிறந்த ஆராய்ச்சி வெளியீட்டுகளுக்கான ஜனாதிபதி விருதுகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இவரின் ஆய்வுக் கட்டுரைகள் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளால் அதிகளவு மேற்கோளிடப்பட்டு வருகின்றன.

சர்வதேசத்தரத்திலான இவரது ஆய்வுச் செயற்பாடுகளினால் ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக தெரிவாகியுள்ள சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு மட்டுமல்லாது யாழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )