
முன்னாள் அமைச்சர்கள் மூவர் விரைவில் கைதாவர்
முன்னாள் அமைச்சர்கள் மூவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் மூன்று முன்னாள் அமைச்சர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பேருவலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் இப்போது அனைவருக்கும் சமமான சட்டத்தை செயற்படுத்த ஆரம்பித்துள்ளது. முன்னர் பணம், அதிகாரம் உள்ளவர்களுக்கு ஒரு சட்டமும், பணம், அதிகாரம் இல்லாதவர்களுக்கு வேறு சட்டமும் இருந்தன. மோட்டார் சைக்கிளொன்றை பதிவு செய்யாமல் வீதியில் செலுத்த முடியாது. ஆனால் அமைச்சர்கள் பதிவு செய்யாத வாகனங்களை செலுத்தினர். இந்நிலையில் நாங்கள் சட்டத்தை முறையாக செயற்படுத்த ஆரம்பித்துள்ளோம். இதுவரையில் பதிவு செய்யப்படாத வாகனங்களை செலுத்திய மூன்று அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூவர் கைது செய்யப்படவுள்ளனர்.
அத்துடன் நாங்கள் சட்டத்தை முறையாக செயற்படுத்துவதால் பொலிஸ்மா அதிபரே பொலிஸாருக்கு பயந்து ஒளிந்து இருக்கும் நிலைமை ஏற்பட்டது. மக்கள் எதிர்பார்த்த அரசாங்கத்தை நாங்கள் அமைத்துள்ளோம்.
இதேவேளை ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதனை மக்கள் எதிர்பார்க்கின்றனர். தண்டனையை அரசாங்கத்தினால் வழங்க முடியாது. அவற்றை நீதிமன்றம் வழங்கும். அதன்படி விசாரணைகளை நாங்கள் துரிதப்படுத்தவும், முறையாக நடத்தவும் தேவையான ஒத்துழைப்பை வழங்குகின்றோம். இதன்படி மேல் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. விசாரணை நிறுவனங்களையும், நீதிமன்றத் தொகுதியையும் நாங்கள் பலப்படுத்தியுள்ளோம் என்றார்.