
சிட்னி முருகன் கோயில் இரதோற்சவம் இன்று!… ஐங்கரன் விக்கினேஸ்வரா
( இவ்வருட சிட்னி முருகன் கோயில் தேர்த்திருவிழா வியாழன் 10/4/2025 சைவ மக்கள் பெருந் திரளாக சூழ இறைமயமாக நடைபெறுகிறது )
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பார் என்பதை போன்று தான், சைவத்தமிழர்கள் இருக்கும் இடமெல்லாம் முருகன் கோவில் கொண்டிருப்பார் என்று கூறலாம். இதனை மெய்யாக்கும் வண்ணம் அவுஸ்திரேலியாவின் வைகாசிக் குன்றத்தில் (Mays Hills) வீற்றிருக்கிறார் சிட்னி முருகன் கோயில்.
அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் அதிகம் வாழும் சிட்னி மாநகர் முருகன் கோயிலில் மகோற்சவம் ஆண்டு தோறும் கொடியேற்றத்துடன் தொடங்கி ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும் பின்னர், தீர்த்தத்துடனும் பதினோராம் நாள் பூங்காவனம் திருக்கல்யாண விழாவுடன் நிறைவடையும். இவ்வருட தேர்த்திருவிழா 10/4/25 வியாழன் சைவ மக்கள் மக்கள் பெருந்திரளாக சூழ இறைமயமாக, அழகிய காவடிகளுடன் கோலாகலமாக நடைபெறுகிறது.
சிட்னி முருகன் கோயிலின் சிறப்பம்சமாக அலங்காரத்தூண்களில் ஆறு படைவீடுகள், மற்றும் கதிர்காமம், செல்வச்சந்நிதி, வெருகலம்பதி, நல்லூர் ஆகிய திருத்தலங்களில் கோயில் கொண்டுள்ள முருகனின் திருவுருவங்கள் கற்பனைத் திருவுருவங்களாக இடம்பெற்றுள்ளன.
இக் கோயில் ஐந்து கருவறைகளைக் கொண்டது சிட்னி முருகன் ஆலயமாகும். வலது பக்கம் விநாயகரும் இடது பக்கத்தில் வள்ளி தெய்வானை சமேதரராக முருகனும் இடையில் உள்ள மூன்று கருவறைகளில் வலப்பக்கத்தில் சிவலிங்கமும் இடப்பக்கத்தில் சிவகாமசுந்தரியும் நடுவண் கருவறையில் முருகனும் எழுந்தருளியுள்ளனர்.
நவக்கிரகம், வைரவர், சண்டேஸ்வரர் ஆகியோருக்கு தனித்தனியே சந்நிதிகள் உண்டு.
சைவ இளைஞர்கள் மெரும் பங்களிப்பு செய்து வரும் இக்கோயிலில் துப்பரவாக்கல் முதல் வாகனம் காவுதல், தேர் இழுத்தல், நந்தவனம் பராமரித்தல், கூட்டு வழிபாட்டில் கலந்து கொள்ளுதல் போன்ற பல வழிகளில் தமது பங்களிப்பினை ஆற்றி வருகிறன்றமையும் குறிப்பிடத்தக்கது.
வைகாசிக் குன்றத்தில் (Mays Hills) வீற்றிருக்கும் சிட்னி முருகன் கோயில் (Sydney Murugan Temple) அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகர் சிட்னி நகரிலிருந்து 25கிமீ மேற்காக உள்ள மேய்சு ஹில் என்ற புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளமை சைவ மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாகும். முருக ஆலயத்தின் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள முருகனின் திருவுருவம் மகாபலிபுரத்து சிற்பக்கலை நிபுணரால் ஆகம நெறிமுறைக்கு அமைய நுட்பமாகச் செதுக்கப்பட்டமை இன்னோர் சிறப்பாகும்.