ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் முகமூடியைக் கிழித்த அல்-ஜசீரா; பிரித்தானிய தமிழர் பேரவை

ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் முகமூடியைக் கிழித்த அல்-ஜசீரா; பிரித்தானிய தமிழர் பேரவை

கனவானாக தன்னை சித்தரிக்கும், மேற்குலகின் பிரபுவாக தன்னை வேறுபடுத்திக்காட்டும் இலங்கை அரசியல்வாதியும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் இழிவான அரசியல் வாழ்க்கையின் முகமூடியை மெஹ்தி ஹசன் அல்ஜசீரா பேட்டியின் மூலம் பகிரங்கமாக கழற்றியுள்ளார் என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் தனது போட்டியாளர் ரணிலுக்கு எதிராக பட்டலந்த ஆணைக்குழுவை அமைத்த போதிலும், ரணில் தனது பதவிக்காலத்தில் மோசமான பாரதூரமான குற்றங்களில் ஈடுபட்ட போதிலும் இந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை சந்திரிகா அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லவில்லை என மேலும் தெரிவித்துள்ள பிரித்தானிய தமிழர் பேரவை, இவ்வாறான அரசியல் கலாசாரத்தில் உள்ளக குற்றவியல் வழக்கு விசாரணை பொறிமுறையை எதிர்பார்ப்பது ஒருபோதும், நீதியை நிலைநாட்டாது என குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தேசிய பிரச்சினையொன்றிற்கு தீர்வை காணவேண்டிய தேவை ஏற்படும் போதெல்லாம் விசாரணை ஆணைக்குழுக்களை அமைக்கும் வரலாறு இலங்கைக்குள்ளது. இலங்கை அரசாங்கங்கள் செய்யும் முதல் வேலை அதுதான்.எனினும் இவ்வாறான எந்த ஆணைக்குழுவும், அர்த்தபூர்வமான நாடாளுமன்ற அல்லது நிறைவேற்றதிகார சீர்திருத்தங்களை இதுவரை முன்னெடுக்கவில்லை. ஆணைக்குழுக்கள் எவற்றினதும் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இது பாதுகாப்பு படையினர் மற்றும் ஏனைய குற்றவாளிகள் மத்தியில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் குறித்த துணிவை ஏற்படுத்தியுள்ளது.மனித உரிமை குற்றங்களில் ஈடுபட்டவர்கள் ஒவ்வொரு தடவையும் சுதந்திரமாக செல்வதை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.1977 முதல் அவர்கள் பல ஆணைக்குழுக்களை அமைத்துள்ளனர். சன்சோனி ஆணைக்குழு.

1985 முதல் 2005 வரை முன்கூட்டியே திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், வலிந்து காணாமலாக்கப்படல் ஆகியவை குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக பல ஆணைக்குழுக்களை அமைத்துள்ளனர்.

எனினும் இந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் பகிரங்கப்படுத்தப்படவில்லை. ஆணைக்குழு கண்டுபிடித்த விடயங்கள் குறித்து அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அரசாங்கத்தின் தவறுகளால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்கிய ஒரு ஆணைக்குழுவை கூட நாங்கள் இதுவரை பார்க்கவில்லை. 2023 ஜூன்மாதம் 21ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ஆற்றிய உரையில் ஐ.நா.வின் மனித உரிமைகளிற்கான பிரதி ஆணையாளர், இலங்கை பொறுப்புக்கூறலை உறுதி செய்ய தவறிய பல ஆணைக்குழுக்களை கடந்த காலத்தில் பார்த்துள்ளது என தெரிவித்திருந்தார்.

அவர் விசேடமாக காணாமல்போனோர் ஆணைக்குழு பற்றி குறிப்பிட்டிருந்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களிற்கு திருப்தியை அளிக்ககூடிய எந்த ஒரு நடவடிக்கையையும் அந்த ஆணைக்குழு முன்னெடுக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார். உண்மையில் இந்த அலுவலகம் காணாமல் போனவர்கள் தொடர்பான ஒரு சம்பவத்திற்கு கூட தீர்வை காணத்தவறியுள்ளது.

இலங்கையின் விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் விதிகளின் கீழ் விசாரணை ஆணைக்குழு என்பது ஒரு உண்மையை கண்டறியும் குழுவாகும். அவர்களிற்கு எந்த நீதித்துறை அதிகாரமும் வழங்கப்படவில்லை. மனித உரிமைகள் அல்லது நல்லிணக்கம் தொடர்பான ஒவ்வொரு ஆணைக்குழுவிற்கும் அதே மாதிரியே பயன்படுத்தப்படுகின்றது.

இந்நிலையில்தான், தன்னை கனவானாக சித்தரிக்கும்,மேற்குலகின் பிரபுவாக தன்னை வேறுபடுத்திக்காட்டும் இலங்கை அரசியல்வாதியும் – முன்னாள் ஜனாதிபதியும் ,ஆறு முறை பிரதமராக பதவி வகித்தவருமான ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வாழ்க்கையின் முகமூடியை மெஹ்தி ஹசன் பகிரங்கமாக கழற்றியுள்ளார்.

அந்தப் பேட்டி பதிவு செய்யப்பட்ட இரண்டு மணித்தியாலங்கள் மெஹ்தி ஹசன் ரணிலை நோக்கி கேள்விக் கணைகளை தொடுத்த போது ரணில் விக்கிரமசிங்க தனது வழமையான பாணியில் ,பொய்களால் தட்டிக்கழித்து பதிலளிக்காமல் சமாளித்து வந்தார்.

எனினும் பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து கேள்வியால் அவர் அம்பலமானார்.

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை கண்டுபிடித்துள்ள விடயங்கள், ரணிலின் உண்மையான தன்மையை மாத்திரமல்ல, அவருக்கு முன்னைய ஆட்சியாளர்கள், இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் வலையமைப்பையும் வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் எவ்வாறு மீறப்படுகின்றன என்பதற்கான உதாரணம் இந்த அறிக்கை. இதுதான் அவர்களின் சொந்த மக்களை ( சிங்களவர்களை) நடத்திய விதம் என்றால், 2009 போரின் போதும் அதன் பின்னரும், கடத்தப்பட்ட, சரணடைந்த தமிழ் மக்களிற்கு என்ன செய்திருப்பார்கள் என்பதை கற்பனை செய்ய ஒரு புத்திசாலி தேவையில்லை.

1948 ம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து எந்த சிங்கள மேலாதிக்க அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், தமிழ் மக்களிற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களிற்கு தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கும் போக்கு மற்றும் இனவெறியின் ஆழமான கலாசாரம் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்படும் அட்டூழிய குற்றங்களில் இருந்து ஒருவரையொருவர் பாதுகாக்கும் மனோநிலையை கொண்டிருந்தன.

சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் தனது போட்டியாளர் ரணிலிற்கு எதிராக பட்டலந்த ஆணைக்குழுவை அமைத்த போதிலும்,ரணில் தனது பதவிக்காலத்தில் மோசமான பாரதூரமான குற்றங்களில் ஈடுபட்ட போதிலும் இந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை சந்திரிகா அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவில்லை.

நாட்டை நிர்வகிப்பது தொடர்பில் கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், அதிகாரத்தில் இருப்பவர்களின் அரசியல் கலாசாரம் இதுதான். இந்த சூழலில் ஒரு உள்ளக குற்றவியல் வழக்கு விசாரணை பொறிமுறையை எதிர்பார்ப்பது ஒருபோதும், நீதியை நிலைநாட்டாது. யுத்தத்தின் இறுதிகட்டத்தில் சரணடைந்தவர்கள் உயிரிழந்துவிட்டதாக கருதப்படுகின்றனர் என்ற ரணிலின் கூற்று அவர்கள் வேண்டுமென்றே கொல்லப்பட்டார்கள் என்பது இவருக்கு தெரியுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

ஒரு சர்வதேச குற்றவியல் வழக்கு விசாரணை பொறிமுறை நிறுவனமயப்படுத்தப்படாவிட்டால்,தமிழ் மக்கள் தங்கள் மீது இழைக்கப்பட்ட குற்றங்களிற்கு நீதி, பொறுப்புக்கூறலை பெறமாட்டார்கள். அது வெறும் கானல் நீராகவே காணப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )