
திருமலையில் 2,36,748 ஏக்கரில் விவசாயம் செய்ய விடாது தடுப்பு
திருகோணமலை மாவட்டத்திலே 1985 ஆம் ஆண்டுக்கு முன்பு மக்கள் விவசாயம் செய்த 118,710 ஏக்கர் நிலத்தை வனத் துறையினரும் 111,619 ஏக்கர் நிலத்தை வன விலங்குத் துறையினரும் 2,599 ஏக்கர் நிலத்தை தொல் பொருள் துறையினரும் பூஜா பூமி, பூஜாக் கொடை என்னும் பெயர்களில் ஏறத்தாழ 3,820 ஏக்கர் நிலத்தை புத்த பிக்குமாரும் ஆக மொத்தம் மக்கள் விவசாயம் செய்த 236,748 ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்ய விடாமல் தடுத்து வருவதாக தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட எம்.பி .சண்முகம் குகதாசன் குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றில் இடம்பெற்ற 2025ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் பேசுகையில்,
அரிசி உற்பத்திக் குறைவுக்கு வெள்ளம், வறட்சி முதலிய இயற்கைப் பேரிடர்கள் ஒரு காரணமாக இருந்தாலும், திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் போர் காலத்திலே கைவிடப்பட்ட 205 சிறுகுளங்களும் 25 அணைக் கட்டுகளும் மீண்டும் நெற்செய்கைக்கு கொண்டு வரப்படாமல் இருப்பதே முதன்மையான காரணியாகும். இவற்றை மீண்டும் நெற் செய்கைக்கு கொண்டு வருவதன் மூலம் ஏறத்தாழ 12,000 ஏக்கர் நிலத்தை நெற் செய்கைக்குள் கொண்டு வர முடியும் .இதன் மூலம் 24,000 மெற்றிக் தொன் நெல் உற்பத்தியை அதிகரிக்கவும் இயலும்.
இவ்வாறு நெல் உற்பத்தியை அதிகரிக்கத் தடையாக இருப்பவர்களில் முதன்மையா னவர்கள் வனத் துறை அதிகாரிகளும் வனவிலங்குத் துறை அதிகாரிகளும் ஆவர். இவர்கள் வேறு ஒரு நாட்டை கைப்பற்றுவதைப் போல விவசாயிகளது நிலங்களை கைப்பற்றி விவசாயம் செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். இவர்கள் நாட்டின் நெல் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்னும் அரசின் கொள்கைக்கு எதிராகச் செயற்படுவோர் போல செயற்பட்டு வருகின்றனர். இவ்விடயத்தில் அமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் பரப்பளவு 32,042 ஏக்கர் ஆகும். இதில் வனவிலங்குத் துறை 25,242 ஏக்கர் நிலத்தை தமக்கு உரியது எனவும் வனத் துறை 11,906 ஏக்கர் நிலத்தை தமக்கு உரியது எனவும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். மொத்தம் 32,042 ஏக்கர் பரப்பளவு நிலத்தை கொண்ட வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் எப்படி 37,148 ஏக்கர் நிலத்தை கைப்பற்றினார்கள்?
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 29,430 ஏக்கர் நிலத்தை வனத்துறை கையகப்படுத்தி வைத்துள்ளது, மேலும் 28,372 ஏக்கர் நிலத்தை கையகப் படுத்த முனைகிறது. வனவிலங்குத் துறை 7,330 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளது, தொல்பொருள் துறை 1,087 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளது, புத்த பிக்குகள் பூஜா பூமி என்ற பெயரில் 3,820 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளனர். இதன் மூலம் 1985 ஆம் ஆண்டுக்கு முன்பு மக்கள் விவசாயம் செய்த 70,039 ஏக்கர் நிலம் நெல் உற்பத்தி செய்யாமல் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு போகத்தில் 140,000 மெற்றிக் தொன் நெல் உற்பத்தி குறைக்கப்படுகிறது.
அதேபோல தொல்பொருள் துறையும் மக்கள் விவசாயம் செய்த நிலங்களை தமது எல்லைக் கற்களைப் போட்டுப் பிடித்து வைத்துக்கொண்டு, அதனுள் தொல்பொருள் சின்னங்களைக் கண்டுபிடிக்க முடியாமலும் அதேவேளை அதனுள் மக்களை விவசாயம் செய்ய விடாமலும் தடுத்து வருகின்றது.எடுத்துக் காட்டாகத் திரியாய் கிராமத்தில் உள்ள ஏறத்தாள ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தினைக் கையகப்படுத்தி எல்லைக் கற்களை போட்டு மூன்று/நான்கு ஆண்டுகளாக பிடித்து வைத்துள்ளனர் எனினும் அப் பகுதியில் எதுவித தொல்பொருள் சின்னங்களையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுடன், அந்த நிலத்தை மீள மக்களுக்கு விவசாயம் செய்ய வழங்கவும் மனம் இன்றி இருக்கின்றனர். இதனால் நெல் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப் படுகின்றது.
திருகோணமலை மாவட்டத்திலே 1985 ஆம் ஆண்டுக்கு முன்பு மக்கள் விவசாயம் செய்த 118,710 ஏக்கர் நிலத்தை வனத் துறையினரும் 111,619 ஏக்கர் நிலத்தை வன விலங்குத் துறையினரும் 2,599 ஏக்கர் நிலத்தை தொல் பொருள் துறையினரும் பூஜா பூமி, பூஜாக் கொடை என்னும் பெயர்களில் ஏறத்தாழ 3,820 ஏக்கர் நிலத்தை புத்த பிக்குமாரும் ஆக மொத்தம் மக்கள் விவசாயம் செய்த 236,748 ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். இதன் மூலம் ஒரு போகத்தில் மட்டும் ஏறத்தாழ ஐந்து இலட்சம் மெற்றிக் தொன் நெல் உற்பத்தி இல்லாமல் போகின்றது. இதை இந்த அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.