
வடக்கு, தெற்கில் காணாமல் போனோரை தேடியறிந்து நீதியை நிலை நாட்டுவோம்
நாட்டில் மனித உரிமைகளை பாதுகாக்கும் சட்டதிட்டங்களை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது வடக்கு, தெற்கில் காணாமல் போனோர் தொடர்பில் தேடியறிந்து அவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவோம் என்று வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மனித உரிமைகளை பாதுகாக்கும் வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், தேசிய ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றை பலப்படுத்தவுவும், அதனூடாக வடக்கு மற்றும் தெற்கில் காணாமல் போனோர் தொடர்பில் தேடியறிந்து அவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹாவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியில் நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.இங்கு அவர் மேலும் கூறுகையில்,
நாங்கள் முன்னால் போய் கொண்டிருக்கின்றோம். இந்த பயணத்தின் போது நாட்டை வீழ்ச்சிக்கு கொண்டு சென்றவர்கள், பழைய திருடர்கள், நாட்டை வங்குரோத்துநிலைக்கு செல்ல காரணமானவர்கள் உள்ளிட்ட எவரையும் மறக்கப் போவதில்லை. முன்னால் பயணித்துக்கொண்டே இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துக்கொண்டே போவோம். எதனையும் நாங்கள் நிறுத்தவும் இல்லை. நிறுத்தப் போவதும் இல்லை. பெரிய வேலை பொருளாதாரத்தை கட்டியெழுப்பி சுபீட்சமான நாட்டை உருவாக்குவதேயாகும். இதில் அதிக கவனத்தை செலுத்தும் அதேநேரத்தில் இந்த வேலைகளையும் செய்துகொண்டு போக வேண்டும்.
இப்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை சத்தமின்றி உள்ளே நடக்கின்றது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி, தாஜுதின் கொலை, பிரகீத் எக்னலிகொட கொலை, லலித் – குகன் காணாமல் போகச் செய்யப்பட்டமை ஆகியன தொடர்பான விசாரணைகள் நடத்தப்படுகின்றன. இதுபோன்று மேலும் பல விடயங்கள் உள்ளன. அவை தொடர்பான விசாரணைகள் நடத்தப்படுகின்றன. இதனால்தான் பொலிஸ்மா அதிபரை தேடுகின்றோம்.
பொருளாதாரத்தை பலப்படுத்தும் அதேவேளை ரூபாவையும் பலப்படுத்தும் நடவடிக்கையுடன் பொலிஸ்மா அதிபரை தேடும் நடவடிக்கையும் இடம்பெறுகின்றது.இதனால் எவரும் குழப்பமடையத் தேவையில்லை. சட்டம் மற்றும் முறைமைகள் உள்ளன. இதன்படி குறிப்பிட்ட குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் முறையாக நீதிமன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். நல்லாட்சியில் நடந்த விசாரணைகள் போன்று இந்த அரசாங்கத்தில் நடக்காது இது வித்தியாசமானது. செய்கையில் நாங்கள் காட்டுவோம்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை தொடர்பில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. அதாவது இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பபடாமை தொடர்பில் தீர்மானம் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் நாங்கள் அதனை மாற்றி மனித உரிமைகளை பாதுகாக்கும் சட்டதிட்டங்களை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளோம். குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்காக தனியான குழுவை அமைத்து ஜனாதிபதி சட்டத்தரணி சுபுன்ரத்னவின் தலைமையில் கலந்துரையாடி வருகின்றோம்.
அதேபோன்று முகப்புத்தகத்தை தடை செய்ய கொண்டுவரப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை மாற்றவும் நாங்கள் அமைச்சரவையில் மூன்று அமைச்சுக்களை உள்ளடக்கிய குழுவை அமைத்து இதற்கான கலந்துரையாட நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.அத்துடன் வீடுகளில் நடக்கும் வன்முறைகள் தொடர்பான சட்டமூலத்தை திருத்தாமல் அதனை முழுமையாக நீக்கி புதிய சட்டமூலத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
எமது அமைச்சர் சரோஜா போல்ராஜின் தலைமையில் வீட்டு வன்முறைகள் தொடர்பில் சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளது.இவற்றை செய்யும் போது யுத்த காலத்தில் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியேற்றுதல், காணாமல் போனவர்களை கண்டறியும் பொறிமுறைகள் ஆகியவற்றை பலப்படுத்தவும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். இதற்காக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், தேசிய ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றை பலப்படுத்திக்கொண்டு வடக்கு, தெற்கில் காணாமல் போனோர் தொடர்பில் தேடியறிந்து அவர்களுக்கு நீதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளுடன் பயணிக்கின்றோம். இவ்வாறான பல செயற்பாடுகளுடனேயே எமது அரசாங்கம் பயணத்தை ஆரம்பித்துள்ளது என்றார்.