
சிறீதரன் விலகினால் நான் எம்.பி.யாவேன்
மாகாண சபை தேர்தல் வருகிறது. அந்த வகையில் சில மாற்றங்கள் நிகழலாம். சிறீதரன் எம்.பி பதவியிலிருந்து விலகுவாராக இருந்தால் நான் பாராளுமன்றம் செல்வேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலரும் முன்னாள் எம்.பி.யுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த சுமந்திரன் மேலும் கூறுகையில்,
பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளினடிப்படையில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திலே எங்களுடைய கட்சியிலே இரண்டாவது இடத்திலே நான் இருக்கிறேன். எங்களுடைய கட்சிக்கு இந்த தடவை ஒரு ஆசனம் கிடைத்த காரணத்தால் மட்டும் தான் நான் பாராளுமன்றத்தில் பிரதிநிதியாக முடியவில்லை. இரண்டு ஆசனங்கள் கிடைத்திருந்தால் நானும் பாராளுமன்றத்தில் இருந்திருப்பேன்.
இந்த தேர்தல் முறைமையின் கீழ் முதலாவது இடத்தை பெற்ற சிவஞானம் சிறீதரன் ஏதாவது காரணத்துக்காக எம்.பி. பதவியிலிருந்து விலகுவாராக இருந்தால் தானாகவே, எவரும் எதுவும் சொல்லாமலே நான் பாராளுமன்ற உறுப்பினராக வருவேன். அதில் எந்தத் தவறும் கிடையாது.விருப்பு வாக்கு அடிப்படையிலே நான் இரண்டாம் இடத்தில் இருக்கிறேன்.
எங்கள் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் மாகாண சபை தேர்தல்கள் வருகின்றது என சிறீதரன் சுட்டிக்காட்டியிருந்தார். முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவது தொடர்பாக அவர் நேரடியாக சொல்லவில்லை. ஆனால் மாகாண சபை தேர்தல் வருகிறது. அந்த வகையில் சில மாற்றங்கள் நிகழலாம். சுமந்திரன் அந்த பதவிக்கு வரலாம் என்றும் சொல்லி இருந்தார். அதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை.
வாக்குகள் அடிப்படையில் மாவட்டத்தில் அடுத்த இடத்தில் இருப்பவருக்கு எந்த வேளையும் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டிய ஒரு தேவை ஏற்படலாம். அப்படி வந்தால் பாராளுமன்ற உறுப்பினராக நான் வருவேன். அதற்கு எனக்கு மறுப்பு கிடையாது. தற்போது இருக்கிற சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தலிலே தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்கிற சூழலில் தேசிய பட்டியல் மூலமாக செல்வது முறையற்றது என்பது என்னுடைய நீண்டகால நிலைப்பாடு என்றார்.