
சித்திரவதை செய்த பொலிஸார் எனது கையை முறித்துள்ளனர்
யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸார் தன்னை கைது செய்து சித்திரவதைக்கு உட்படுத்தி கையையும் முறித்துள்ளதாக நெல்லியடி பகுதியை சேர்ந்த நந்தகுமார் இலங்கேஸ்வரன் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 18ஆம் திகதி எனது அம்மா வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றின் முன்னால் நின்ற போது, முச்சக்கர வண்டியில் வந்த பொலிஸார் , என் மீது தாக்குதல் மேற்கொண்டு, கைவிலங்கு இட்டு, முச்சக்கர வண்டியின் உள்ளே கீழே போட்டு , தமது கால்களுக்குள் என்னை அழுத்தி பிடித்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
எதற்காக என்னை தாக்கி,கைது செய்தீர்கள் என கேட்ட போது, வயர் வெட்டின சம்பவம் தொடர்பில் என கூறினார்கள். எனக்கு அப்படியொரு சம்பவம் தெரியவில்லை.
பின்னர் எனக்கு கைவலி ஏற்பட்டு , நான் வலியினால் துடித்து என்னை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுமாறு கூறிய போது மந்திகை வைத்தியசாலையில் என்னை அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காகக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டேன்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் “வீடியோ கோல்” ஊடாக பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் என்னை பார்வையிட்டு , எனக்கு பிணை வழங்கி எனது வழக்கினை எதிர்வரும் 10 ஆம் மாதத்திற்கு திகதியிட்டுள்ளார்.
என் மீதான தாக்குதல் மற்றும் சித்திரவதை குறித்த மனித உரிமை ஆணைக் குழுவின் யாழ் . பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்.
பெயின்டிங் வேலைக்கு சென்றே எனது குடும்பத்தினை பார்த்து வருகிறேன். தற்போது பொலிசாரின் தாக்குதலால் எனது கை முறிந்துளதால் என்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை. அதனால் எனது குடும்பத்தின் வாழ்வாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
அதேவேளை , இவரால் மனித உரிமை ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய எதிர்வரும் 4 ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு காங்கேசன்துறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக் குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், நெல்லியடி பகுதியில் தொலைத் தொடர்பு கேபிள் வயர்கள் வெட்டி களவாடப்பட்டு வருவதாகவும் , பொலிஸார் அசமந்தமாக செயற்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந் நிலையில் வயர்கள் களவாடப்படும் சம்பவம் குறித்து உரிய விசாரணைகளை முன்னெடுத்து தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு நெல்லியடி பொலிஸாருக்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் கடும் அழுத்தம் கொடுத்த நிலையிலையே, வயர்களை திருடியதாக ஒருவரை பொலிஸார் கைது செய்து சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.