ஜெனீவாத் தொடர் இன்று ஆரம்பம்

ஜெனீவாத் தொடர் இன்று ஆரம்பம்

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் இன்று 24 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது.

இதில் பங்கேற்பதற்காக ஜெனிவா செல்லும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இலங்கையின் உயர்மட்ட குழு, நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜெனிவாவுக்கு புறப்பட இருந்ததுடன் எதிர் வரும் 28 ஆம் திகதி வரை ஐ.நா மனித உரிமைகள் அமர்வுகளில் கலந்துக்கொள்ளவுள்ளது.

இதன் போது இலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகள் குறித்த பிரேரணைக்கு எதிராகவும் இலங்கையில் அரசு முன்னெடுத்து வரும் நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்தும் அறிக்கை ஒன்றை இலங்கை தரப்பு சமர்பிக்க உள்ளது.

அத்துடன் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க புதிய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பான தெளிவுப்படுத்தலையும் இலங்கையின் உயர்மட்ட குழு முன்வைக்கவுள்ளது.

அத்துடன் நட்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளை பிரத்தியேகமாக சந்தித்து இலங்கை தரப்பு கலந்துரையாட உள்ளது.

மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படும் 51/1 தீர்மானத்தை இலங்கை தொடர்ந்து எதிர்க்கவும், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர் குற்றங்கள் குறித்து ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் தீர்மானத்தை நிராகரிக்கவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை அமெரிக்கா விலகியமையை சுட்டிக்காட்டி, 51/1 நகல்வடிவையும், இலங்கைக்கு எதிராக 2014 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் வலுவிழக்க வைக்கும் கோரிக்கையை ஜெனிவாவில் முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )