தெற்காசிய பிராந்தியத்தில் பலம் இழக்கிறதா இந்தியா?

தெற்காசிய பிராந்தியத்தில் பலம் இழக்கிறதா இந்தியா?

அநுரவை புதுடில்லி குறிவைத்தது ஏன்?

தெற்காசியாவின் வல்லரசு இந்தியா என்பதே எழுதப்படாத சட்டம். ஆனால், இன்னமும் உலக வல்லரசுகளில் ஒன்றாக உருவெடுக்க இந்தியா கடுமையாக போராடுகிறது. கடந்த தசாப்தத்துடன் ஒப்பிடுகையில் இந்தியா பொருளாதாரத்தில் எதிர்பாராத வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்தியாவின் இன்றைய அந்நிய கையிருப்பு 800 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இந்தியாவின் வளர்ச்சியானது ஆசிய பிராந்தியத்துக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் என்பதுடன், இலங்கை, நேபாளம், மாலைதீவு, பங்களாதேஸ் உட்பட பல தெற்காசிய நாடுகளில் பொருளாதாரத்தையும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்வதற்கான வாய்ப்புகளும் உருவாகும்.

தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவுக்கு எதிரான மனநிலை
இந்தியா அதன் அண்டைய நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செல்படுவதாக கூறுகிறது. ஆனால், அண்மைக் காலமாக இந்தியாவுக்கு எதிரான போக்கு தெற்காசிய பிராந்தியத்தில் அதிகரித்துள்ளதுடன், பல நாடுகள் இந்தியாவின் தலையீட்டை நேரடியாக எதிர்த்துள்ளன.

மாலைதீவில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னர் அந்நாட்டு ஜனாதிபதி முகமது முய்ஸு, இந்திய படைகளை மாலைதீவிலிருந்து வெறியேறுமாறு கூறியதுடன், சீனாவுக்குச் சார்பான போக்கை பின்பற்ற ஆரம்பித்தார். இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டது. பின்னர் இந்த விவகாரம் ஓரளவு சுமூகமாகியுள்ளது. மாலைதீவு ஜனாதிபதி தமது முதல் வெளிநாட்டுப் பயணத்தை துருக்கிக்கே மேற்கொண்டிருந்தார்.

இது இதற்கு முன்பு மாலைதீவு ஜனாதிபதிகள் பின்பற்றிய இந்திய பயணத்துக்கு மாறாக அமைந்தது. நேபாளத்திலும் இந்தியாவுக்கு எதிரான சில கருத்துகள் உருவாகியுள்ளன. நோபாளம் இந்து மதத்தை பின்பற்றும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட நாடாக உள்ள போதிலும், அங்கு இந்தியாவின் செல்வாக்கை அவர்கள் விரும்பவில்லை. இதனால் நேபாளப் பிரதமராக தெரிவான ஷர்மா ஒலி தனது முதல் வெளிநாட்டு பயணத்தை சீனாவுக்கு மேற்கொண்டிருந்தார்.

பங்காளதேஷிலும் இந்தியாவுக்கு எதிரான மனநிலை தீவிராக உள்ளது. குறிப்பாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி இந்தியாவுக்கு சார்பாக இருந்ததாக அவரது ஆட்சிக்காலத்தில் பல எதிர்ப்புகள் இருந்தன. அதனால் பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முஹம்மது யூனுஸ் அமெரிக்காவிற்கே தமது வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டிருந்தார். பாகிஸ்தான் எப்போதும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட நாடு. அதேபோன்று ஆப்கானிஸ்தானும் இந்தியாவின் செல்வாக்கை விரும்பாத நாடு.

அநுரவுக்கு டில்லி சிவப்பு கம்பள வரவேற்பு

விரும்பியோ விரும்பாமலோ இலங்கையில்தான் இந்தியாவின் செல்வாக்கு அதிகமாக உள்ளது. அது இந்நாட்டின் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புகளை பல சந்தர்ப்பங்களில் ஏற்படுத்தியுள்ளது. என்றாலும், இதனை சமாளித்து சீனாவின் செல்வாக்கை இலங்கையில் தவிர்க்கும் வண்ணம் தமது இராஜதந்திர நகர்வுகளை புதுடில்லி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்தால் அது இந்திய தீபகற்பத்தில் தேசியப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பது சர்வதேச அரசியல் ஆய்வாளர்களது கருத்து.

அதேபோன்று இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான இராஜதந்திர நகர்வுகள் எடுக்கப்பட்டால் அது இலங்கைக்கு இருள் சூழ்ந்த யுகத்தை உருவாக்கும் என்பதும் யதாரத்தம். இதனை உணர்ந்தவர்களாகத்தான் கடந்தகால இலங்கையின் ஆட்சியாளர்கள் செயல்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் மாத்திரம் ஓரளவு இந்தியாவின் எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், 2015 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மீண்டும் இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேணி இருதரப்பு உறவை வலுப்படுத்தினார்.

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கொள்கைகள் சீனாவுக்கு ஆதரவாக இருக்கும் என்றே அவர் ஆட்சிக்குவர முன்னர் பரவலாக எதிர்வு கூறப்பட்டது. ஆனால், அவர் ஆட்சிக்கு வர முன்னரே புதுடில்லி அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பை அளித்திருந்ததுடன், ஆட்சிமாற்றத்தின் பின்னர் புதுடில்லிக்கு அழைத்து மகத்தான கௌரவத்தை வழங்கி அவரை தமது பாதைக்கு நகர்த்தியுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனாவை சமாளிக்கும் அநுரவின் அணுகுமுறை

சீனாவின் பரந்துபட்ட முதலீடுகளால் தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா அதன் செல்வாக்கை இழந்துவரும் சூழலில் இலங்கையுடனான இராஜதந்திர உறவை மிகவும் வலுப்படுத்திக் கொள்ளும் தேவை இந்தியாவுக்கு உள்ளது. அதன் காரணமாக இலங்கையுடனான வர்த்தக மற்றும் ஏனைய உறவுகளை விரைவாக வலுப்படுத்தும் தேவை இந்தியாவுக்கு எழுந்துள்ளது.

இதற்கு ஜனாதிபதி அநுரவின் சில கருத்துகள் சாதகமாக இருப்பதாக இந்தியா கருதுவதுடன், அடுத்த ஐந்தாண்டுகள் மிகவும் ஸ்திரமான ஆட்சியொன்று இலங்கையில் நிலவும் என்பதும் இந்தியாவின் எதிர்பார்ப்பு. அதன் காரணமாகவே புதுடில்லியுடன் மிகவும் நெருக்கமான உறவை பேணிய ரணில் விக்ரமசிங்க போன்றவர்களைவிட அநுரவுக்கு மிகப்பெரிய வரவேற்பை டில்லி வழங்கியுள்ளது.

ஆனால், ஜனாதிபதி அநுர, இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதேவேளை, சீனாவின் அதிகமான முதலீடுகளை ஈர்த்து இரு நாடுகளுடனும் சமதளத்தில் இராஜதந்திர உறவை கட்டியெழுப்ப விரும்புகிறார். அதன் காரணமாகவே இந்திய பயணத்தை தொடர்ந்து அவர் பீஜிங் செல்கிறார். இது சீனாவை சமாளிக்கும் அநுரவின் அணுகுமுறை என இலங்கையின் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டில்லி, பீஜிங்கை எவ்வாறு கையாளப் போகிறார் அநுர?

சீனாவை சமாளிக்கும் அநுரவின் அணுமுறைக்கு தேவையற்ற தடைகளை ஏற்படுத்த கூடாதென்பதில் இந்தியா மிகவும் கவனமாக இருப்பதுடன், இலங்கையில் இந்தியாவின் செல்வாக்கை அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் பலமாக்கிக் கொள்ளும் வகையிலும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. வழமையாக சீன கப்பல்கள் இலங்கைக்கு வரும் போது டில்லியிலிருந்து செய்தியொன்று வெளியாகும்.

ஆனால், கடந்தவாரம் சீனக் கப்பலொன்று கொழும்புக்கு வந்தது. அதனை பிரதமர் ஹரிணி அமரசூரியவே நேரில் சென்று வரவேற்றார். ஆனால், டில்லியில் இருந்து வெளியாகும் வழமையான கவலைச் செய்தி வெளியாகவில்லை. இது இந்தியாவின் இராஜதந்திரத்தை வெளிப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சீனா ‘பெல்ட் அண்ட் ரோட்’ திட்டத்தில் (BRI) தெற்காசியாவில் சிறிய நாடுகளின் பொருளாதார மற்றும் மூலோபாய உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனை முறியடித்து தெற்காசியாவில் பலமான நாடாக உருவெடுப்பதற்கான திட்டங்களை புதுடில்லி வகுத்துள்ளது. அதனை அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என இந்தியா கூறுகிறது.

அதன் ஒருகட்டமாக இந்திய பிரதமர் மோடி விரைவில் இலங்கைக்கு வரும் உறுதிமொழியை வழங்கியுள்ளார். அவரது விஜயம் இலங்கையுடனான உறவை மற்றுமொரு அத்தியாயத்தை நோக்கு நகர்த்தும் என இந்தியா நம்புகிறது. புதுடில்லி – கொழும்புக்கான உறவு அநுரவின் ஆட்சியில் எப்படி இருக்க போகிறது? இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பிராந்திய போட்டிகளை எவ்வாறு அநுர சமாளிக்க போகிறார்?.

சோஷலிச கொள்கையின் வழித்தோன்றலாக தேசிய மக்கள் சக்தியும் அதனை தலைமை தாங்கும் அநுரவும் இந்தியா மற்றும் சீனாவை எவ்வாறு கையாள போகிறார் என்பதை சர்வதேசம் உற்று நோக்க ஆரம்பித்துள்ளது.

-சுப்ரமணியம் நிஷாந்தன்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )