
பாராளுமன்ற தேர்தல் முடிபுகளும் தமிழ் மக்களும்
இலங்கை ஜனநாயக நாடு என்ற வகையில் நடைபெற்ற முடிந்த பாராளுமன்றத் தேர்தலை நோக்குகிறார்கள். இந்நிலையில் இலங்கை முழுவதும் தேசிய மக்கள் சக்தியானது வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது. குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழர் தாயகங்களில் கூட அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
முற்று முழுதாக தமிழ் தேசிய உணர்வுகளாலும் விசையினாலும் கட்டி எழுப்பப்பட்ட வடக்கில் கூட தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியானது குறிப்பிட்டு கூறக்கூடிய அளவிற்கு உள்ளது.
இலங்கை பல்லின சமூகம் வாழும் நாடு என்ற வகையில் இந்த ஆட்சியை தீர்மானிப்பதில் என்றும் இல்லாதவாறான நகர்வுகளை ஒன்றிணைத்து திசைகாட்டி சின்னத்திற்கான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக யாழ் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 80,830 வாக்குகளினால் மூன்று ஆசனங்களையும் மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தி 55,498 வாக்குகளினால் ஒரு ஆசனத்தையும் திகாமடுல்ல மாவட்டத்தில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 313 வாக்குகளினால் நான்கு ஆசனங்களையும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் 39,894 வாக்குகளினால் இரண்டு ஆசனங்களையும் பெற்றுள்ளது.
தமிழர் பிரதேசங்களில் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியானது வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்துள்ளது. இது குறித்து தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டெல்வின் சில்வா குறிப்பிடுகையில், விகிதாசார தேர்தல் முறையின் கீழ் இது ஒரு அபார வெற்றி எனவும் வெற்றியின் அரசியல் நோக்கங்களை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் வடமாகாண மக்கள் இனவாதத்தை புறந்தள்ளி திசைகாட்டிக்கு வாக்களித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
இத்தகைய பின்னணியில் தமிழர் பிரதேசங்களில் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சிக்கு காரணமான பின்னணி அரசியலைத் தேடுவதாக கட்டுரை அமைய உள்ளது.
ஒட்டு மொத்தமாக மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்ற ஆசனத்தில் அறுதிப் பெரும்பான்மையை தனதாக்கிக் கொண்ட தேசிய மக்கள் சக்தியில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய தொகுதிகளில் பெரும்பான்மையை தக்க வைத்துள்ளது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களது வரலாற்று அனுபவங்களே இத்தகைய முடிவுகளை எடுக்கக் காரணமாகியது. என்று கருத இடமுண்டு. பல்லின சமூக கட்டமைப்பில் இன நெருக்கடிக்கு தீர்வைப் பெற்றுக் கொள்வதே பெரும்பான்மை தமிழர்களின் அபிலாஷையாக உள்ளது. அதற்கான சரியான தலைமைத்துவம் தேசிய மக்கள் சக்தியிடம் உண்டு என்று கருதும் தமிழர்களாக அவர்களை கருத முடியுமா என்ற கேள்வி தவிர்க்க முடியாது. அதனை விரிவாக பார்த்தல் அவசியமானது.
முதலாவதாக, தமிழ் மக்கள் தமிழ் தேசியத்திற்குப் பின்னால் இல்லை என்ற ஒரு விம்பம் முன்வைக்கப்படுகிறது.
ஆனால் தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளே தமிழ்த் தேசியக் கருத்தியலை முன்வைக்கும் அளவிற்கு தேர்தல் வெற்றி நகர்ந்துள்ளது என தங்களின் தோல்வியை வைத்து கொண்டு கூறுகின்றனர். இதற்கு காரணம் தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளின் மீது மக்கள் அவநம்பிக்கை கொண்டுள்ளனர்.
2010 தொடக்கம் 2019 வரை தமிழ் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகள் காட்டிய வழியில் வாக்களித்தனர். பிரதான போர் குற்றவாளி என அடையாளப்படுத்தப்பட்ட ராஜபக்ஷவிற்கு ராஜபக்ச எதிர்ப்பு வாதம் என்பதை அடிப்படையாகக் கொண்டு வாக்களித்தார்கள். 2010 ஆம் ஆண்டு சரத் பொன்சேகாவிற்கும் 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனாவிற்கும் 2019 ஆம் ஆண்டு சஜித் பிரேமதாசாவுக்கும் வாக்களித்திருந்தனர்.
இதுதான் ராஜபக்ச எதிர்ப்பு வாதம் எனப்படுகிறது. எனினும் தமிழ்த் தேசியத்தின் பின்னால் மக்களின் திரட்சி இருக்கின்றது என்பதற்கு எழுக தமிழ் மக்கள் திரட்சியும், பொத்துவில் தொடக்கம் பொலி கண்டி வரையான மக்கள் திரட்சியும், முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் போது மக்கள் ஒன்று கூடுவதும், மாவீரர் நினைவு தினத்தின் போது மக்கள் ஒன்று கூடுவதும், சாந்தனின் இறுதிச் சடங்கின் போது மக்கள் ஒன்றுகூடிய சம்பவங்களும் உதாரணமாகக் கொள்ளலாம்.
இவற்றுக்கெல்லாம் மக்களை யார் அழைத்தது? தாங்களே தங்களுக்கு அழைப்பாளியாக இருந்து கொண்டு அந்த இடத்தில் மக்கள் திரட்சியை வெளிப்படுத்தி இருந்தார்கள்.
இரண்டாவதாக, இனப் படுகொலையின் போது ராஜபக்ஷ சிங்கள மக்கள் மத்தியில் யுத்த கதாநாயகனாகத் தெரிந்தார். இனவாதப் பின்னணியில் தமிழின எதிர்ப்பை கையில் எடுத்த ராஜபக்க்ஷவிக்கு எதிராக செயற்பட முடியாத நிலையில் ஜே.வி.பியின் தோல்வியும் நிச்சயிக்கப்பட்டது.
யுத்த காலத்தில் 39 ஆசனங்களை கொண்ட ஜே.வி.பியினரின் பலமானது பின்னர் 6 ஆசனங்களாக குறைந்தது. இதனால் பெற்ற அனுபவங்களைத் தொடர்ந்து அடுத்து வந்த மக்கள் ஆதரவும் நல்லாட்சி என்ற பெயரில் வந்த அரசுக்கும், ராஜபக்க்ஷ குடும்பத்தினருக்குமான ஆதரவும் தளத்தை வழங்கியதன் பிரதிபலிப்பாக அரசியல் பொருளாதர நெருக்கடிகளில் வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
இத்தகைய பின்னணியில் பெற்ற அனுபவங்களின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்ட தமிழ் பொது வேட்பாளருக்கு கூட தமிழ்க் கட்சிகள் முறையான ஆதரவை வழங்கவில்லை.
மூன்றாவது, தமிழ் மக்கள் தமக்கான உரிமை மீறல்களின் போதெல்லாம் நீதி கோரிய போது அநீதியின் வடிவமாக கிடைத்ததையே பெற்றுக் கொண்டனர்.
1956 ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் தொடங்கி 1996 ஆம் ஆண்டு திருகோணமலை குமாரபுரம் தமிழினப் படுகொலை, 1979 ஆம் ஆண்டு இன்பன், செல்வம் படுகொலை, யாழ் நூலக எரிப்பு, 1995ஆம் ஆண்டு நவாலி தேவாலயக் குண்டுத் தாக்குதல் என மக்கள் தேடிய நீதிக்கெல்லாம் அர்த்தமற்ற நீதிகளையும் சுயநலமான அநீதிகளையும் பெற்றுக் கொண்டனர்.
நான்காவது, இன சமநிலைப்படுத்தல் என்ற பெயரில் வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களும் விகாரைகளும் அமைக்கப்பட்டனவே தவிர பொருளாதார சமநிலைப்படுத்தல் என்ற பெயரிலோ அரசியல் சமநிலையைப்படுத்தல் என்ற பெயரிலோ சிங்கள பிரதேசங்களைப் போன்று தமிழர் பிரதேசங்களில் இடம்பெறவில்லை.
குறிப்பாக மட்டக்களப்பில் எத்தனையோ அரசியல் தலைமைகள் வந்தும் கூட படுவான்கரை பிரதேசம் பின்தங்கிய அபிவிருத்தி பிரதேசமாகவே அடையாளம் காணப்பட்டு வருகின்றது.
அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தனிப்பட்ட நலன், கட்சி நலன் சார்ந்து செயற்படுகிறார்களே ஒழிய மக்கள் பிரதிநிதிகள் என்ற சொல்லிற்கான அர்த்தத்தை கூட அம்மக்களுக்கு வழங்கவில்லை.
ஐந்தாவதாக, வடக்கு கிழக்கை பொறுத்தவரை சிறுபான்மை தேசிய இனங்களின் இணக்கமான முடிவுகளுக்கு தீர்வு பெற்று கொடுக்க அரசியல்வாதிகளை விட சமூக ஆர்வலர்களாக இருந்த தலைவர்கள் தம் மக்களுடன் கைகோர்த்து செய்யப்பட்ட சந்தர்ப்பங்களே இவர்களுடைய எண்ணங்களுக்கு உந்துதல் வழங்கின எனலாம்.
இத்தகைய செயற்பாடுகளுக்கான வாய்ப்புகள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்திலும் கிடைக்கப் பெற்றது.
இத்தனை விடயங்களை அடிப்படையாகக் கொண்டே பழமையான அரசியல் தலைமைகளிடமிருந்து அதிகாரத்தை புதிய தலைவர்களுக்கு பெற்று கொடுத்த வகையில் நோக்கும் போது வடக்கு வாக்காளர்கள் சரியாகச் செயல்பட்டார்களா என்ற கேள்வி உண்டு.
தற்போதைய அரசைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு பெற்று கொடுக்குமே தவிர இன நெருக்கடிக்கான தீர்வை பெற்றுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்ற விமர்சனம் தவிர்க்க முடியாதது. காரணம் இனப்பிரச்சினைக்கு சிறு நகர்வைக் கூட தேசிய மக்கள் சக்தியின் கடந்தகால நடவடிக்கைகளில் காண முடியவில்லை.
சமத்துவம் பேணப்படும், நினைவேந்தல் உரிமை வழங்கப்படும் என்று குறிப்பிட்டாலும் சமத்துவம் என்று கூறப்பட்டதன் பின்னணியில் வளர உள்ள சிங்கள இனமயமாக்கல் கோட்பாட்டையும் தமிழர்கள் உணர்ந்து செயல்பட வேண்டி உள்ளது.
வாக்களிப்பதும் ஆட்சி அமைப்பதும் முக்கியமல்ல. அதனை சரிவர செயல்படுத்துவதே முதன்மையானது.
-ஜீவராசா டிலக்சனா