
அநுர இல்லாத அதிஉயர் சபை
1997 ஆம் ஆண்டு ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட அநுரகுமார திஸாநாயக்கவின் நாடாளுமன்ற அரசியல் பயணம் 2000 ஆம் ஆண்டிலேயே ஆரம்பமானது.
சுமார் 2 தசாப்தகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டுள்ளார். 2008 ஆம் ஆண்டு முதல் ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழு தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அநுரவின் உரையென்றால் அவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கும். ஒரு மணிநேரம் கடந்தாலும் சோர்வின்றி செவிமடுத்துக் கொண்டிருக்கலாம்.
தரவுகள், புள்ளிவிபரங்கள், உள்ளக தகவல்கள் என அத்தனை விடயங்களையும் விவாதத்தின்போது அம்பலப்படுத்தி உரையாற்றுவார்.
நாடாளுமன்றத்தில் ஒருநாள், மீன்பிடி அமைச்சு தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதற்கு முதல்நாள் தங்காலை கடற்கரை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகி இருந்தது.
அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றுகையில், அப்போது ஆளுங்கட்சி எம்.பியாக இருந்த அஸ்வர் (தற்போது உயிருடன் இல்லை) அநுரவின் உரைக்கு கடும் எதிர்ப்பை வெளியிடுவார்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளை சட்ட ஏற்பாடுகளை சுட்டிக்காட்டி, விவாதத்துக்கு அப்பால் சென்று உரையாற்றுகின்றார், இதற்கு இடமளிக்ககூடாது என சபாபீடத்திடம் முறையிட்டார். அநுரவின் உரைக்கு தொடர்ச்சியாக எதிர்ப்பை வெளியிட்டார்.
‘சரி நான் விவாதத்துக்குரிய விடய தானத்துக்குள் உரையாற்றுகின்றேன்’ என அறிவித்துவிட்டு தனது உரையை அனுர தொடர்ந்தார்.
“மீனவரின் கப்பலில் இருந்து ஒரு மீனைக்கூட காகம் தூக்கிச்செல்ல முடியாத அளவு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருக்கும் ஒரு பகுதியில் எப்படி பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு நடக்க முடியும்?” என மீனையும், கடலையும், மீனவர்களையும் ஒப்பிட்டு பேசி, தான் கூற வந்த விடயத்தை தெளிவாக அன்று முன்வைத்தார் அநுர குமார திஸாநாயக்க.
அதுமட்டுமல்ல அநுர உரையாற்றும்போது, கருத்துகளை முன்வைக்கும்போது பெரும்பாலும் இடையூறுகள் ஏற்படுத்தப்படுவது குறைவு. ஆளுங்கட்சியில் இருந்து அவ்வாறு எவரேனும் இடையூறு விளைவிக்க முற்பட்டால் அவர்களை மௌனிக்க வைப்பதற்குரிய, அவர்கள் பற்றிய தரவுகளும் அநுர வசம் இருக்கும். அதனால் அநுர உரையாற்றும்போது ஏனையோர் குறுக்கீடுகளை செய்வது குறைவு.
வரவு – செலவுத் திட்ட விவாத காலப்பகுதியில் மிகவும் காத்திரமான முறையில் அநுரவின் கருத்துகள் அமையும்.
2018 ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சியின்போது எதிரணியில் இருந்து ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்கு நாடாளுமன்றம் ஊடாக அநுர முன்னெடுத்த நகர்வுகள் ஏராளம். பிரதம நீதியரசராக இருந்த ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக குற்றப் பிரேரணை முன்வைக்கப்பட்ட போது, ராஜபக்ச முகாமின் அழிவின் ஆரம்பம் என சுட்டிக்காட்டி இருந்தார்.
தோல்விகள் ஏற்படும் போதெல்லாம் அவர் துவண்டு விடவில்லை. நாடாளுமன்றக் குழுத் தலைவராக கட்சி உறுப்பினர்களுக்கு நம்பிக்கையளித்தார். கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர் நாடாளுமன்றம் ஊடாக ஜனாதிபதி தேர்வு இடம்பெற்றது. அநுரகுமார திஸாநாயக்க போட்டியிட்டார். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மூவர் மட்டுமே அவருக்கு வாக்களித்திருந்தனர். பெறுபேறுகளை சபாநாயகர் அறிவிக்கும்போது பெரும்பாலானவர்கள் ஏளனமாகச் சிரித்தனர்.
ஆனால் இன்று அவர் மக்கள் ஆணையுடன் வென்று காட்டியுள்ளார். அன்று சிரித்தவர்கள், இன்று சபையில்கூட இல்லை.
இப்படி அநுரவை பற்றி பல விடயங்கள் குறிப்பிடலாம்.
தற்போது அவர் ஜனாதிபதி. நிதி, பாதுகாப்பு அமைச்சு பதவிகளை வகிக்கின்றார். எனவே, அரச கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கவும், வரவு – செலவுத் திட்ட காலப்பகுதியில் பாதீட்டை முன்வைக்கவும், தனது அமைச்சு சார்ந்த விவாதத்தின்போது பதிலளிக்கவும் நாடாளுமன்றம் வருவார். ஆனால் முன்பு சபையில் இருந்த அநுர தற்போது இல்லை. நாடாளுமன்றம் மாதம் எட்டு நாட்களுக்கு கூடும். அந்த எட்டு நாட்களும் அநுர சபையில் இருக்கப் போவதில்லை.
அநுர நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகி விட்டார். சட்டவாக்க சபையில் இனி அவரின் இடத்தை நிரப்பப்போவது யார்?
அதேவேளை ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயற்படக் கூடியவர். அவருக்கு அரசமைப்பு சரத்துகள், நிலையியற் கட்டளை சட்டங்கள் என அத்தனை விடயங்களும் அத்துப்படி. 1977 ஆம் ஆண்டு முதல் சபையில் தொடர்ச்சியாக அங்கம் வகித்தார். இம்முறை ரணில் இல்லை.
அதேபோல 1970 ஆம் ஆண்டு நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்த மஹிந்த ராஜபக்சவும் இம்முறை சபையில் இல்லை. முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள் எவருமே இல்லை.
2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பாதுகாக்கப்பட்ட கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இம்முறை இல்லாமல் போயுள்ளது. கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இன்மையும் கவலையளிக்கின்றது.

