மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இலங்கை அமைச்சர்கள் கலந்துரையாடல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இலங்கை அமைச்சர்கள் கலந்துரையாடல்

இலங்கை கடற்தொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஜே.வி.பி.யின் மத்தியக்குழு உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்புத் துறை துணை அமைச்சரும், ஜே.வி.பி.யின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர் நேற்று முன்தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலக் குழு அலுவலகத்திற்கு சென்றிருந்தனர்.

கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், பயனாடை அணிவித்தும், நூல்களை வழங்கியும் வரவேற்றார். அமைச்சர்கள் இருவரும் மலையக பகுதியை சேர்ந்தவர்கள் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர்களுடன் நடைபெற்ற உரையாடலில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் புதிதாக அமைந்துள்ள இலங்கை அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்து தெரிவித்ததோடு, தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது முன்னெழுகிற பிரச்சினைகள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.

இலங்கை தோட்ட தொழிலாளர்களின் வாழ்விட, வாழ்வாதாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு கடவுச்சீட்டு வழங்க வேண்டும். குறிப்பாக, கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்துவது பற்றியும், தமிழ்மொழிக்கு சம அந்தஸ்து வழங்குவது பற்றியும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனக் கோரப்பட்டது.

இலங்கையின் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தமிழர், இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளில் உறுதியாக கவனம் செலுத்தும், மக்கள் தங்கள் மீது அதன் காரணமாகவே நம்பிக்கை வைத்துள்ளனர் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )