சுற்றுலா பயணிகளுடன் சேர்ந்து இஸ்ரேலிய இராணுவம் இலங்கைக்குள் வருகை; மொசாட் வருவது நல்லதல்ல

சுற்றுலா பயணிகளுடன் சேர்ந்து இஸ்ரேலிய இராணுவம் இலங்கைக்குள் வருகை; மொசாட் வருவது நல்லதல்ல

நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலும் பாதுகாப்பு அமைச்சினால் அனுமதிவழங்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டு வரும் இஸ்ரேல் இனத்தவர்களின் மதஸ்தலங்கள் அல்லது அவர்களின் கலாசார நிலையங்களுக்கு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை 24 மணி நேரம் பாதுகாப்பு வழங்கி வரும் நிலையில் இவை என்ன கட்டிடங்கள்?என்ன நோக்கத்திற்காக அமைக்கப்படுகின்றன என்பது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட .எம் பி.யான முஜிபுர் ரஹ்மான், இஸ்ரேல் சுற்றுலா பயணிகளுடன் இஸ்ரேல் இராணுவத்தினர் வருவதை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு வலியுறுத்திய அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

எமது நாட்டில் இருந்த சில அரசாங்கங்கள் பலஸ்தீன் பிரச்சினையைவிட இஸ்ரேலுடன் தொடர்புகளை வைத்துக்கொள்ள மிகவும் ஆர்வத்துடன் செயற்பட்டு வந்தன. இவ்வாறு இஸ்ரேலுடன் வைத்துக்கொண்ட சில தொடர்புகள் காரணமாக, பலஸ்தீன் தொடர்பில் எமது நாடு பின்பற்றிவந்த நடவடிக்கைகளால் சர்வதேச ரீதியில் எங்களுக்கு இருந்துவந்த நற்பெயரும் தற்போது பாதிக்கப்பட்டு வருகிறது. குறி்ப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் எமது நாடு தொடர்பில் இருந்துவந்த தொடர்பும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் எமது நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் பாதுகாப்பு அமைச்சினால் அனுமதிவழங்கப்பட்டு இஸ்ரேல் இனத்தவர்களின் மதஸ்தலங்கள் அல்லது அவர்களின் கலாசார நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

மாத்தறை வெலிகம பிரதேசத்தில், தெஹிவளை அல்விஸ் பிரதேசத்தில் அவர்களின் மத நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று கொழும்பு 7 இல் ரெட் சினமனுக்கு முன்னால் பாரிய கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டிடங்களை நிர்மாணிக்கும் இடங்களில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை 24 மணி நேரம் பாதுகாப்பு வழங்கி வருகின்றது .

பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை 24 மணி நேரம் பாதுகாப்பு வழங்கி அமைக்கப்படும் இந்தக் கட்டிடங்கள் என்ன? இலங்கையில் யூதர்கள் இல்லை. அவ்வாறு இருக்கையில் அவர்களின் மத வழிபாட்டுக்கு இந்தளவு பாரிய கட்டிடம் எதற்காக ? கடந்த ஒரு தினத்தில் அல்விஸ் பிளேசில் அமைக்கப்படும் கட்டிடத்துக்கு அருகாமையால் நடந்து சென்ற பல்கலைக்கழக மாணவன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அந்த மாணவன் நீதிமன்றில் ஆஜர்படுத்தியே விடுவிக்கப்பட்டார். அந்தளவு பலத்த பாதுகாப்பு இஸ்ரேலியர்களால் அமைக்கப்படும் கட்டிடங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

எனவே பலஸ்தீன் ஆதரவு அரசாங்கம் என்றவகையில்,பலஸ்தீன் மக்களின் விடுதலைக்காக எங்களுடன் இணைந்து வீதியில் இறங்கி போராடியவர்கள் என்ற வகையில் இந்தக் கட்டிடங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? மறு பக்கத்தில் இது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகும். ஏனெனில் மொசாட் இங்கு வருவது என்பது அது நல்ல விடயமல்ல. வெலிகமவில் முஸ்லிம் மக்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களின் நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் இதுதொடர்பாக அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.

அதேபோன்று பலஸ்தீனில் பொது மக்களை ,சிறுவர்களை கொலைசெய்யும் இஸ்ரேல் இராணுவத்தினர் எமது நாட்டுக்குள் நுழைகிறார்கள். குறிப்பாக அவர்கள் பலஸ்தீனில் மேற்கொள்ளும் மனிதாபிமமனமற்ற செயல்கள் காரணமாக உளரீதியான் ஆறுதலை பெறுவதற்கே வருகின்றனர். இதன் காரணமாக அதிகமான நாடுகள் இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் வருவதை நிறுத்தி இருக்கின்றன. தென்ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மாலை தீவு போன்ற நாடுகள் நிறுத்தி இருக்கின்றன. அதேநேரம் இலங்கைக்கு இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் வருவது அதிகரித்துள்ளதால் ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலா பயணிகளின் வருகை எமது நாட்டில் குறைவடைந்துள்ளது.

அதனால் இஸ்ரேல் சுற்றுலா பயணிகளுடன் இஸ்ரேல் இராணுவத்தினர் வருவதை தடுப்பதற்கு எதிர்காலத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா எனக்கேள்வி எழுப்பினார்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )