
”13’ஐ’முழுமையாக நடைமுறைப்படுத்தும் இராஜதந்திர வேலைகளை இந்தியா தொடர்ச்சியாக மேற்கொள்ளும்
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை அருகில் வைத்து இலங்கை தமிழ் மக்கள் சார்ந்த மூன்று விடயங்களை வலியுறுத்திய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி நன்றி தெரிவிப்பதாக அக்கட்சியின் முன்னாள் எம்.பி.யான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் 75 வருட நிறைவை முன்னிட்டு ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இந்தியாவுக்கு செய்த விஜயத்தில் அவர்களுடைய கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் இந்திய பிரதமர் மூன்று விடயங்களை இலங்கை தமிழ் மக்கள் சார்ந்ததாக சொல்லியிருந்தார்.
முதலாவது இலங்கை அரசியலமைப்பை முற்று முழுதாக அமுல்படுத்த வேண்டும் என்பதாகும். காலாகாலமாக இந்திய அறிக்கைகளில் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்று சொல்லப்படுவது வழக்கமாக இருந்திருக்கிறது. நாங்கள் அடிக்கடி சொல்கின்ற விடயம் 13ஆவது திருத்தம் என்பது இலங்கை அரசியல் அமைப்பில் பின்னிணைப்பு அல்ல. அரசியலமைப்பின் ஒரு பகுதி இலங்கை அரசியலமைப்பில் 21 திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன . அதில் ஒரு பகுதி தான் இந்த 13ஆவது திருத்தம். அதில் காணி பொலிஸ் அதிகாரங்கள் நிறைவாக இருக்கிறதோ இல்லையோ அதை மாகாணத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்ற அளவிலாவது உடனடியாக முழுமையாக அமுபடுத்தப்பட வேண்டும்.
இரண்டாவதாக அவர் சொல்லியிருப்பது இலங்கை தமிழ் மக்களுடைய அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது. இலங்கை தமிழ் மக்களுடைய அபிலாஷை என்பது 1956 லிருந்து இன்று வரை தெட்டத் தெளிவாக எந்தவித கருத்து வேறுபாடுமின்றி சமஸ்டி முறைமைக்கு குறைவான எந்த ஒரு தீர்வையும் தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியில் வழங்கியது கிடையாது. ஆகவே அந்த அரசியல் அபிலாஷை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது பாரத பிரதமருடைய கோரிக்கை.
மூன்றாவதாக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பது. ஆகவே இந்த விடயங்களை ஒரு கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அருகில் நிற்கத்தக்கதாக பாரத பிரதமர் வலியுறுத்தி இருப்பது நாங்கள் வரவேற்கின்ற விடயம். பாரதப் பிரதமருக்கு நாங்கள் நன்றி சொல்கின்ற அதேவேளை இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்தியாவிற்கு இருக்கின்ற கடப்பாட்டையும் நாங்கள் இந்த வேளையிலே நினைவு கூற விரும்புகிறோம்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு வேண்டிய பொறுப்பு இந்திய அரசாங்கத்திற்கு இருக்கின்ற அதேவேளை, அதனை நிறைவேற்ற செய்கின்ற எல்லா வகையான ராஜதந்திர வேலைகளையும் இந்தியா அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் என்றும் நம்புகின்றோம் என்றார்.

