பெண்களும் சமூக வலைத்தளங்களும்

பெண்களும் சமூக வலைத்தளங்களும்

(ஜெ.செந்துஜா)

இன்றைய காலத்தை பொறுத்த வரைக்கும், படிப்பறிவான பெண்கள் அதிகளவில் நம் சமூகத்தில் இடம் பிடித்துள்ளனர். இணைய உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று அதிகளவிலான சமூக வலைத்தளங்களான ரிக்ரொக், முகநூல் மற்றும் இது போன்ற ஏனைய பல வலைத்தளங்கள் நம்மோடு ஒன்றித்தவையாகி விட்டன. அதிலும் குறிப்பாக பெண்கள் இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதை பல சமூக தாக்கங்களின் ஊடாகக் கண்டு கொண்டிருக்கிறோம். பொதுவாக வயது வரம்பின்றி, ஓய்வு நேரம் தவிர்ந்த மற்ற நேரத்தின் பெரும்பங்கை இந்த வலைத்தளங்களைப் பார்ப்பதிலேயே தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது வெளிப்படை.

முகநூலிலும் சரி, ரிக்ரொக்கிலும் சரி, நேரலை என்ற பொத்தானை அழுத்தி இரவு பகல் பாராது எம் பெண்கள் நேரத்தை செலவிடுகிறார்கள். தமது புகைப்படங்களையும் பதிவேற்றி வருகின்றனர். இதனால் பாரிய பின் விளைவுகள் ஏற்பட நிறைய சந்தர்ப்பங்களை அவர்களே ஏற்படுத்திக் கொடுத்து விடுகின்றனர். தவறான இணையத்தள பாவனையினால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் அவற்றிற்கான எச்சரிக்கைகளும் நாளாந்த பத்திரிகைகளிலும் செய்திகளிலும் காணக்கூடியதாக இருக்கிறது. இருந்தும் கைபேசியும் கையுமாக அலையும் பெண்களின் ஒரு பகுதியினர் மீண்டும் மீண்டும் இவ்வாறான நாசவலைக்குள் அகப்பட்டு விடுகின்றனர். இவர்கள் இதைப் புரிந்து செய்கின்றனரா அல்லது அசட்டுத் துணிச்சலுடன் செயற்படுகின்றார்களா எனத் தெரியவில்லை. யார், என்ன என்று தெரியாத முகமறியாத மனிதர்களை முகநூலில் நம்பி வீதிக்கு வந்த பெண்கள் ஏராளம்….ஏராளம்.

அனைத்துப் பெண்களையும் குறை கூறி சுட்டிக் காட்ட முடியாது. ஒரு சில பெண்களே இவ்வாறான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். நம் பெண்கள் சாதிக்க வேண்டிய தருணங்களும் துறைகளும் நிறையவே உள்ளன. எனவே பெற்றோர்களும் சிறிது கவனமெடுத்து அதிக நேர தொலைபேசி பாவனைகளை தடை செய்வதன் மூலம் இவ்வாறான அழிவில் இருந்து தம் பெண் பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொள்ளலாம். சிறிது சிந்தித்து விழித்து கொண்டால்… இத்தகைய சமூக வலைத்தளங்களில் மூழ்கிக் கிடக்கும் பெண்களும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வார்கள். இதற்கு பெண்கள் சமுகவலைத்தளங்களை பாவிக்கக் கூடாது என்று அர்த்தமில்லை. நமது பாதுகாப்பிலும் நமது குடும்பத்தின் பாதுகாப்பிலும் கூடிய கவனம் எடுக்க வேண்டும், தொழில்நுட்ப வளர்ச்சியில் இருக்கும் பாதகங்களையும் புரிந்து செயற்பட வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

அதை சரியான முறையிலும் தேவைக்கு ஏற்பவும் பயன்படுத்த வேண்டும். பெண்களே! பொழுதெல்லாம், இத்தளத்தில் நேரத்தை வீணடிக்காது சாதித்து காட்டுங்கள். நம்மால் உருவான சமுதாயம் மேலும் வளரட்டும். வீரப் பெண்களால், பார் போற்றும் மங்கையரால் ஓர் உன்னத சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியும். நாமும் ஓர் உதாரணமாகத் திகழ்வோம்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )