
மரணப்படுக்கையில் இலங்கைத் தீவு
(பாரி)
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு சுத்தமாகக் காலியாகிவிட்ட நிலையில், ஏற்பட்டுள்ள கடுமையான அரசியல், பொருளாதார நெருக்கடிகள் மக்களை மீள முடியாதளவு வறுமையின் பிடிக்குள் தள்ளி விட்டுள்ளன. இந்த நிலை இலங்கைத் தீவிலுள்ள சுமார் 22 மில்லியன் மக்களில் 12% இற்கும் அதிகமானோரை வறுமைக் கோட்டின் கீழ் தள்ளியுள்ளதாகவும், மேலும் மில்லியன் கணக்கானவர்கள் உணவு, சுகாதாரம் மற்றும் வேலைக்கான பாதுகாப்பையும் உத்தரவாதத்தையும் இழந்து வருவதற்கு காரணமாகுவதாகவும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.உலக வங்கியின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், ‘இடம்பெறும் பொருளாதார நெருக்கடியில், மனித வளர்ச்சியின் தாக்கம் மிகக் கடுமையானது’ என்றும், இந்த நெருக்கடி நிலைகள் குடும்பங்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை முழுமையாகச் சீர்குலைத்துவிடும்’ என்றும் கூறியுள்ளார். ‘குடும்பங்களில் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவது தவிர்க்க இயலாததாகிவிடும்’ என்று அவர் அச்சம் தெரிவித்திருப்பதும் கவனிக்கத் தக்கது.
கடந்த ஏப்ரலில் 46% ஆகவிருந்த பணவீக்கம் இப்போது இன்னும் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஒரு முட்டையின் விலை வெறும் பத்து ரூபாயிலிருந்து அறுபது ரூபாயைத் தொட்டிருப்பது ஒரு சிறந்த உதாரணம். நாளாந்தம் வேலைசெய்து பிழைக்கும் மக்களின் அன்றாடச் சாப்பாட்டுக்கே திண்டாட்டம் என்ற நிலையில், மருந்துக்கும், மருத்துவ உபகரணங்களுக்கும் ஏற்பட்டுள்ள கடுமையான தட்டுப்பாடு உயிர்களைக் காவு கொள்ள ஆரம்பித்துவிட்டது. இப்போது அரச ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவும் பணமில்லாமல் அரசாங்கம் தள்ளாடுவதால், அரச ஊழியர்களும் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக் கணக்கானோர் நாட்டை விட்டுத் தப்பியோடுகின்றனர். எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரையில் காத்திருப்பது போல் இப்போது கடவுச்சீட்டு எடுக்கவும் காத்துக் கிடக்கின்றனர்.

ஆபத்பாந்தவராகக் கருதப்பட்ட ரணில் எல்லாரிடமும் ஓடியோடி கடன் கேட்டுக் கொண்டிருக்கிறார். கப்பல்கள் வரிசைகட்டி நிற்பதாகவும், எரிபொருள் இறக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் இரு வாரங்களில் எரிபொருள் பிரச்சனை ஓரளவிற்கு நிவர்த்தியாகிவிடும் என்றும் பிரதமர் ‘பீலா’ விட்டு நான்கு வாரங்கள் கடந்து விட்டன. மக்கள் இன்னமும் எரிபொருளுக்கான வரிசையில் காத்திருந்து காத்திருந்து தம் வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாட்டின் பொருளாதாரச் சவால்களைச் சமாளிக்கும் அவசரகால நிதியாக மூன்று பில்லியன் டொலர்களை சர்வதேச நாணய நிறுவனத்திடம் கையேந்தி நிற்கிறது இலங்கை. ஏற்கனவே வெளிநாட்டு கடன் முதலீட்டாளர்களிடம் தான் பட்டிருந்த 50 பில்லியன் டொலர் கடனை தம்மால் கட்ட இயலாது என்று கைவிரித்து விட்டது இலங்கை. அதை விடவும் முக்கியமாக, பட்ட கடனுக்குக் கட்ட வேண்டிய வட்டித் தொகையான 78 மில்லியன் டொலர் பணத்தை முதற் தடவையாக கட்டத் தவறியதன் மூலம் இரண்டு மிக முக்கிய கடன் மதிப்பீட்டு முகவர்களின் நம்பிக்கையையும் இழந்துவிட்டது.
IMF எனப்படும் சர்வதேச நாணய நிறுவனத்திடம் கடன் பெறுவதற்காக தவமிருக்கும் இலங்கைக்கு இன்னமும் கடன் கிடைக்காமல் இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். எல்லாவற்றிற்கும் மேல், பட்ட கடன்களை மறுசீரமைப்பதுடன், நீண்டகால பொருளாதார பலவீனங்களை நிவர்த்தி செய்யும் கட்டமைப்புகளை இலங்கை உருவாக்க வேண்டும் என உலக வங்கி எதிர்பார்க்கிறது. இது நிறைவேறும் வரை கடன் கிடைப்பது கடினம்தான். இதை விடவும், மார்ச்சில் உர இறக்குமதிப் பிரச்சனையால் இலங்கைக்குப் போடப்பட்ட தடை, தேயிலை ரப்பர் ஏற்றுமதிக்குத் தடையாக இருப்பதும் IMF இன் தீர்மானம் எடுக்காமைக்கு இன்னுமொரு காரணமாகிறது.

எது எப்படியிருப்பினும், இந்தியாவைத் தவிர வேறெந்த நாடும் இதுவரையில் ரணிலுக்கு உதவி செய்ததாகத் தெரியவில்லை. மனிதாபிமான அடிப்படையில் 16 மில்லியன் டொலர்களும் கடனாக 3.5 பில்லியன் டொலர்களும் தருவதாக உத்தரவாதமளித்துள்ளது இந்தியா. உரம், எரிபொருள் என கொஞ்ச உதவி இந்தியாவிடமிருந்து கிடைத்திருந்தாலும் அவையெல்லாம் ‘யானைப் பசிக்கு சோளப் பொரி’தான்.
இனிவரும் மூன்று வாரங்கள் மிகக் கடுமையானதாக இருக்கும் என்று பதவிக்கு வந்த நாளிலிருந்து பிரதமர் ரணில் கூறிக் கொண்டிருக்கிறார். அது பொய்யல்ல. 70 ஆண்டு காலத்தில் மக்கள் சந்திக்காதளவு பஞ்சத்தைத் தவிர்க்க, எரிபொருள் பிரச்சனைகள் அத்தனையையும் கடந்து,
விவசாயிகள் வயலில் இறங்கி நெல் உற்பத்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர. பயிரிட்ட கதிர்களை அறுவடை செய்ய எரிபொருள் வேண்டி நிற்கும் விவசாயிகளுக்கு அதை வழங்காமல் வேறு முக்கியமற்ற இடங்களுக்கு எரிபொருளை வழங்கும் கூத்தும் இன்னுமொரு புறத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, புதிதாக இரண்டு அமைச்சுகள் முளைத்திருக்கின்றன. தம்மிக பெரேரோ, பவித்திரா வன்னியாராய்ச்சி ஆகியோர் அவற்றை அலங்கரிக்க இருக்கிறார்கள். அமைச்சரவையை சிறிதாக்கி, பெரிதாக இருக்கும் நாட்டின் பொருளாதாரப் பிரச்சனையைத் தீர்த்து வைப்போம் என்று கூறி ‘ரணில் விக்கிரமசிங்க’வைப் பதவியேற்றியதை இந்த நேரத்தில் மறுபடியும் ஞாபகமூட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம்.
அரசாங்கங்கள் மாறும்போதெல்லாம் தம்மில் பிரச்சனை எதுவும் இல்லாதது போலவும், சட்டத்தில்தான் சிக்கல் போலவும் காட்டிக் கொண்டு சட்டத்திருத்தம் செய்வதையும், அதை பாராளுமன்ற வாக்கெடுப்புக்கு விட்டு தமக்கு ஏற்றாற்போல் நடைமுறைப் படுத்துவதையும் இலங்கையின் ஆட்சியாளர்கள் ஒரு கலையாகவே கொண்டிருக்கின்றனர். 21ம் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர முனையும் ரணிலும் இதற்கு விதிவிலக்கா என்ன?
‘துப்புக் கெட்டவர்களுக்கு இரட்டை விருது’
தமிழ் மக்களாவது விழிப்புடன் செயற்பட்டு தம்மைக் காத்துக்கொள்ள வேண்டும்.