
சில வாரங்களுக்கு இலங்கை முடங்கும் நிலை
நாட்டில் எரிபொருள் கையிருப்பு தீர்ந்துவருவதால் ஏற்படக்கூடிய நெருக்கடி காரணமாக நாடு சில வாரங்களுக்கு முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரச உயர்மட்டத்தில் கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருகின்றது.
இதன்படி பயணக் கட்டுப்பாட்டை விதித்து நாட்டை முடக்க தீர்மானம் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.
எரிபொருள் கையிருப்பு குறைவடையும் நிலையில் நேற்று முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பெட்ரோல் மற்றும் டீசலை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எரிபொருள் விநியோகத்திற்காக வாகனங்களுக்கு டோக்கன் முறை செயற்படுத்தப்பட்டுள்ள போதும் அந்த முறையிலாவது எரிபொருளை விநோயோகிக்கும் அளவுக்கு எரிபொருள் கையிருப்பு இல்லை.
இந்த நெருக்கடி நிலைமை ஜூலை 10 ஆம் திகதி வரையில் தொடரும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.
ஆனால் எரிபொருள் கப்பல்கள் எப்போது வரும் என்பது தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படாத காரணத்தினால் தற்போதைய நெருக்கடி நிலைமை ஜூலை 10 ஆம் திகதியை கடந்தும் தொடரும் என்று பொருளாதர ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறான நிலமையில் நேற்று முதல் மாகாணங்களுக் கிடையிலான பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பொருட்கள், சேவை வாகன போக்குவரத்துகள் ஸ்தம்பித்தம் அடைந்து வருகின்றன. அரச துறையை போன்று தனியார் துறையும் வீடுகளில் இருந்து ஊழியர்களை பணியாற்றுமாறு அறிவித்து வருகின்றன.
நகர் பிரதேச பாடசாலைகளுக்கு ஜூலை 10 வரையில் விடுமுறை வழங்கவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இவ்வாறாக எரிபொருள் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை மேலும் மோசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுத்துச் செல்ல இடமளிக்கும் வகையில் சில வாரங்களுக்கு நாட்டை முடக்க அரசாங்கம் தீர்மானம் எடுக்கலாம் என்று கூறப்படுகின்றது.