
நடுவானில் மோதவிருந்த விமானங்கள்; தவிர்த்த ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானி
நடுவானில் மிகப்பெரிய விமான விபத்தை தவிர்ப்பதற்காக, லண்டனில் இருந்து கொழும்புக்கு பயணித்த ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் யு.எல் 504 என்ற விமானம்,நேற்று முன்தினம் பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.
துருக்கிய வான்வெளியில் இந்த விமானம் பறந்துகொண்டிருந்த போது, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்துடன் இந்த விமானம் நேருக்கு நேர் மோதுவதனை தவிர்ப்பதற்காகவே இவ்வாறு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
275 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற விமானம், லண்ட ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு வரும் வழியில் அங்கராவில் துருக்கியின் வான்வெளிக்குள் நுழைந்துள்ளது.
அங்கரா விமானக் கட்டுப்பாடு நிலையம் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் யு.எல் 504 விமானத்தின் விமானியிடம், அவர்கள் பறந்து கொண்டிருந்த 33,000 அடியில் இருந்து 35,000 அடிக்கு பயணிக்குமாறு தெரிவித்துள்ளது.
விழிப்புடன் இருந்த யு.எல் 504 விமானி மற்றும் பணியாளர்கள், ஏற்கனவே பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானம் ஒன்று 15 மைல் தொலைவில் 35,000 அடி உயரத்தில் பறப்பதை அவதானித்துள்ளனர்.
இதையடுத்து, மேலே ஏற்கனவே ஒரு விமானம் 35,000 அடி உயரத்தில் பறப்பதாக அங்கராவில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு பிரிவினருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.
டுபாய் மற்றும் சிங்கப்பூர் நோக்கிச் சென்ற பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானம், யு.எல் 504 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஹீத்ரோவில் இருந்து புறப்பட்டுள்ளது.
விமானங்கள் பறப்பதை சரிபார்த்த அங்காரா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு பிரிவு, யு.எல் 504 விமானியிடம் 35,000 அடி உயரத்தில் எந்த விமானத்தையும் தங்கள் ரேடாரில் கண்டறியவில்லை என தெரிவித்து யு.எல் 504 விமானத்தை மேல் நோக்கி பயணிக்க அனுமதி வழங்கியுள்ளது.
இதன் போது, பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானத்தை விமானத்தின் ரேடாரில் கண்டறிந்த யு.எல் 504 விமானி, மீண்டும் அங்காரா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு பிரிவுக்கு இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில்,ஏற்கனவே 35,000 அடிக்கு மேலே விமானம் ஒன்று இருப்பதால், யு.எல் 504 விமானத்தை மேல் நோக்கி செலுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அறிவித்த உயரத்திற்கு யு.எல் 504 விமானி அதிக வேகத்தில் பறந்திருந்தால், பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானத்தின் மீது நேருக்கு நேர் மோதியிருக்கும்.
இந்த நிலையில் அவதானமாக செயற்பட்ட யு.எல் 504 விமானி கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கி பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
யு.எல் 504 விமானத்தில் இருந்த 275 பயணிகள் அதன் பணியாளர்கள் மற்றும் பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் அதன் பணியாளர்களின் உயிர்களை யு.எல் 504 விமானத்தின் தலைமை விமானியின் விழிப்புணர்வு மற்றும் வலுவான முடிவு காரணமாக காப்பாற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் யு.எல் 504 விமானம் தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நேற்று முற்பகல் விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 504 ரக விமானம் ஒன்று மற்றுமொரு விமானத்துடன் மோதுவதைத் தவிர்த்ததாக வெளியான ஊடக செய்தி தொடர்பில் ஶ்ரீலங்கன் விமான சேவை அவதானம் செலுத்தியுள்ளது.
அதன்படி, கடந்த 13 ஆம் திகதியன்று லண்டனில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு சொந்தமான யு.எல் 504 ரக விமானத்தின் விமானிகள் எவ்வித ஆபத்துமின்றி அந்த விமானத்தை இயக்கியதை நாம் உறுதிப்படுத்துகிறோம்.
இருப்பினும், சில ஊடக செய்திகளின் படி, யு.எல் 504 விமானம் மற்றொரு விமானத்துடன் மோதும் அபாயத்தை ஏற்படுத்தவில்லை என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம் எனத் தெரிவித்துள்ளது.